மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகராக கலக்கி வந்த தனுஷ் தற்போது இயக்குநராக தனது படைப்பின் மூலம் ரசிகர்களை மிரளவைத்து வருகிறார். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பிறகு தற்போது ‘இட்லி கடை’ என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். குபேரன் படத்திலும் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக ராஜகுமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் நுழைந்த தனுஷ் ‘The Gray Man’ படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். எந்த ஒரு தமிழ் சினிமா நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில், தனுஷ் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தில் ஹாலிவுட் இளம் நடிகை சிட்னி ஸ்வீனி ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.