‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க  மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!

 ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க  மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!

இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து லாலு பிரசாத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன. தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே லோக்சபா தேர்தலை இண்டியா கூட்டணி சந்தித்தது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி அமர்ந்தது. அடுத்து நடந்த ஜம்மு – காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களிலும் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி., ராகுலின் தலைமையில் இண்டி கூட்டணி செயல்படுவதாக கூறப்படும் நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. மேலும், அதானி விவகாரத்தில் பார்லிமென்ட்டை ராகுல் தலைமையில் காங்கிரஸ் முடக்கி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் இயங்க வேண்டும் என திரிணமுல் கூறுகிறது. இது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை எதிரொலித்தது.

இச்சூழலில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘ வாய்ப்பு கிடைத்தால் கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் ‘, எனக்கூறியிருந்தார். மம்தாவின் கருத்து ‘ இண்டியா’ கூட்டணியில் சலசலசப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் கருத்துக்கு சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., கட்சி – சரத்சந்திர பவார் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருந்தன.

இந்நிலையில் மம்தாவுக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஒன்றும் இல்லை. மம்தாவை நாங்கள் ஆதரிப்போம். ‘இண்டியா’ கூட்டணியின் தலைமை மம்தாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். ஆந்திராவை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.பி., விஜயசாய் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘ இண்டியா ‘ கூட்டணியை வழிநடத்த மம்தா திறமையான தலைவர். கூட்டணியை வழிநடத்த தேவையான அரசியல் தேர்தல் அனுபவம் உள்ளது. 42 லோக்சபா தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலத்தின் முதல்வராக உள்ள அவர், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது திறமையை நிரூபித்து வருகிறார்’, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...