மழையால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..!
மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. பெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு, வீட்டின் பொருட்கள், ஆவணங்கள், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் எல்லாம் கடும் சேதம் அடைந்துள்ளன.
இதற்கிடையே இந்த மாதம் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜன.2 முதல் ஜன.10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை இந்த மூன்று மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.