சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!
சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!சாதனைப் பெண்மணியின் பிறந்த தினமின்று💐
1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும் செயலிலும் சீர்திருத்தமும், தேசபக்தியும் இழையோட வாழ்ந்து வழிகாட்டினார். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் மேம்பாடு இவற்றில் இவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் வரலாற்று தடங்களில் இவரை என்றும் வைத்திருக்கும்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை. தமிழகத்தின் பெண் தலைவர்களில் முக்கியமானவர். காந்தியடிகள் தலைமைமையில் 1930-இல் நாடு முழுவதும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றபோது, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர் ருக்மணி லட்சுமிபதி. ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
ருக்மணி லட்சுமிபதி, டிசம்பர்- 6, 1892- ஆம் ஆண்டு சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு பெரும் நிலச்சுவான்தாராக இருந்தார். ருக்மணி, பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., பட்டம் பெற்றார். டாக்டர் லட்சுமிபதியுடன் இவரது திருமணம் நடைபெற்றது. 1923-இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார் ருக்மிணி லட்சுமிபதி. 1926-இல் பாரீஸில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமைப் பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1934-இல் சென்னை மாகாண சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தொடர்ந்து, 1937-இல் நடந்த சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று, சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அன்றைய முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில் 1946 முதல் 1947 வரை சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதன்மூலம் தமிழகத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் மற்றும் சுதந்திரத்துக்கு முன்பு அமைச்சர் பதவி வகித்த ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
சென்னை எழும்பூரில் இருந்த மார்ஷல் சாலைக்கு “ருக்மிணி லட்சுமிபதி சாலை’ என்று இவர் பெயர் சூட்டப்பட்டது. 1951 ஆகஸ்ட் 6ஆம் நாள் மறைந்தார்.1997-இல் இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.