இன்றைய முக்கிய நிகழ்வுகள் (28.11.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (28.11.2024)

அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று

இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை’ எனப் போற்றப்படும் பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று லண்டனில் (1814) பிறந்தார். இவரது தந்தை கவிஞர். லண்டன் கிரைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், அடிஸ்கோம்பே என்ற இடத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மடாலயக் கல்வி நிறுவனத்தில் பயின்றார். ராயல் இன்ஜினீயர்ஸ் எஸ்டேட் கல்விக்கூடத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர், 19 வயதில் இந்திய – பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘பெங்கால் இன்ஜினீயர்ஸ்’ பிரிவில் 2-ம் நிலை லெப்டினென்டாக சேர்ந்தார். 28 ஆண்டு ராணுவப் பணியில், பல உயர் பதவிகளை வகித்தார். மேஜர் ஜெனரல் ஆனபிறகு, ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு 1833-ல் வந்தபோது, ஜேம்ஸ் பிரின்செப் என்ற அகழ்வாராய்ச்சி நிபுணரின் நட்பு கிடைத்தது. பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களின் வரலாறு குறித்து அறிந்தார். அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்டார். அவாத் மன்னரின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். குவாலியரில் அரசுப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். குவாலியர் நகரின் மோரார் நதியில் வளைந்த கல் பாலம், பஞ்சாபில் 2 பாலங்கள் ஆகியவற்றை கட்டும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1856-ல் பர்மாவின் தலைமைப் பொறியாளராக நியமனம் பெற்றார். வடமேற்கு மாகாணங்களிலும் பணியாற்றினார். இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை அரசுக்கு எடுத்துக்கூறி தேவையான நிதியுதவியும் பெற்றார். 1861-ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அகழ்வாராய்ச்சியின் சர்வேயராக நியமிக்கப்பட்டார். பிறகு, அதன் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். சில காலம் கழித்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏராளமான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். பல அரிய தொல்பொருள்களைக் கண்டறிந்தார். பண்டைய இந்தியாவின் பல பகுதிகள், நாணயங்களைக் கண்டறியும் பணிகளுக்கு உதவினார். பழைய எழுத்துமுறைகளை அறியவும் நிபுணர்களுக்கு உதவினார். இந்தியா குறித்து பழங்கால சீன, கிரேக்கப் பயணிகள் தெரிவித்த கருத்துகளை மொழிபெயர்க்கவும் அவற்றை வெளியிடவும் உறுதுணையாக இருந்தார். அகழ்வாராய்ச்சித் துறையிலும் உயர் பதவிகளை வகித்தார். இந்தியாவின் மறக்கப்பட்ட வரலாற் றுப் பெருமைகள் பற்றிய பல தகவல்களை உலகுக்கு எடுத்துக் கூறினார். இந்தியாவின் பண்டைய வரலாற்று குறித்த ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவினார். * ராணுவத்தில் இவர் ஆற்றிய சேவைக்காக ‘ஆர்டர் ஆஃப் ஸ்டார் ஆஃப் இந்தியா’ பதக்கம், ‘ஆர்டர் ஆஃப் இந்தியன் எம்பயர்’ விருது கிடைத்தன. ‘நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் இந்தியன் எம்பயர்’ என்ற கவுரமும் பெற்றார். சிறந்த புராதன, வரலாறு, புவியியல் வல்லுநராகப் புகழ்பெற்றார். இந்தியா முழுவதும் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பல பொருட்கள், நினைவுச் சின்னங்கள் பவுத்த மதம் சார்ந்தவையே எனக் கண்டார். தனது ஆராய்ச்சிகளைத் தொகுத்து 23 தொகுதிகள் அடங்கிய ‘ஏன்ஷியன்ட் ஜியாகரபி ஆஃப் இந்தியா’ என்ற நூலாகப் படைத்தார். இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிகளின் தந்தை எனக் குறிப்பிடப்பட்டார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும், அதுகுறித்து எழுதியும் வந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 79 வயதில் இதே நவ28 (1893)இல் மறைந்தார்.

பொ.ம.இராசமணி நினைவு நாள்

தமிழறிஞர், பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர். 79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஓவியர். தென் தமிழக மக்களால் “நகைச்சுவைத் தென்றல்”, “இரண்டாம் கலைவாணர்”, “இலக்கிய வித்தகர்” என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். தமிழ் இலக்கியங்களையும் சமூக மற்றும் சமய சீர்திருத்த சிந்தனைகளையும் பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகமாக இவர் நகைச்சுவையை கண்டார். இவரது நகைச்சுவை நிறைந்த இலக்கியப் பேச்சுக்கள், 1960களின் தொடக்கத்தில், படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமென கருதப்பட்ட தமிழ் இலக்கிய மன்றங்களை, பெருந்திரளான மக்கள் கூட்டம் காண வர செய்தன. துவக்கத்தில், ரா. பி. சேதுப்பிள்ளை, குன்றக்குடி அடிகளார் மற்றும் கி. வா. ஜகந்நாதன் போன்ற தமிழறிஞர்களின் தலைமையில் பேசி வந்த இவர், பிறகு தனக்கென்று தனியொரு பாணியில் நகைச்சுவை பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும், விசாரணை மன்றங்களையும் படைத்தார். இவரை நடுவராகக் கொண்டு, இவரது தலைமையில் 60 தமிழ் பேச்சாளர்கள் அடங்கிய ஒரு குழு இலக்கிய, சமூக மற்றும் சமய தலைப்புகளில் இத்தகைய விவாத மன்றங்களை தமிழகமெங்கும் ஏறக்குறைய 40 ஆண்டு காலம் (1967 -2006) நடத்தி வந்தது. இக்குழுவின் களம் பெரும்பாலும் தென் தமிழக மாவட்டங்களாக இருந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், சில முறை கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், ஒரு முறை ஐக்கிய அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரத்திலும் (2002 ஆம் ஆண்டு) இக்குழு தமது விவாத மன்றங்களை அரங்கேற்றி உள்ளது. பொ. ம. ராசமணி, தனது பாணி பட்டிமன்ற முறைமைகளை இளைய தலைமுறை பேச்சாளர்கள் கற்றுக்கொள்வதற்காக, “நகைச்சுவை பட்டிமன்றங்கள் 41” (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2001) என்ற நூலாக வெளியீட்டு உள்ளார். பொ. ம. ராசமணி மரபு கவிதைகளையும் சந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது “அறிவு பசி” (சாமி செல்வ வெளியீடு, சங்கரன் கோயில், 1963) என்ற சந்தப் பாடல் திரட்டு சமூக சீர்திருத்த சிந்தனைகளைப் போதிக்கிறது. இவரது கிறித்தவப் புதினமான “சாவின் தோல்வி” (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1960), மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகளை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் உணர்வு போராட்டங்களை நம் கண் முன்னே படைக்கிறது. தமிழ் வர்ணனைகளை இவர் எடுத்தாளும் திறனுக்கு எடுத்துக்காட்டு இவரது “பேசாத பேச்சு” (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1961) எனும் நூல். இவரது நகைச்சுவை கதைகளின் தொகுப்பான “சிரிப்பு தரும் சிந்தனைகள்” (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 1991) என்ற நூல் மூன்றாம் பதிப்புகளை கடந்து இன்னும் பல இளைய தலைமுறை நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை அகராதியாக உதவுகிறது. இவரது இலக்கிய ஆராய்ச்சிக்கு உதாரணம் இவரது “வள்ளுவர் ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறார்?” (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2004) என்ற நூல். இவரது 61 ஆண்டு கால (1948 -2009) எழுத்து பணிக்கு சான்றாக இன்று இவரது 79 நூல்கள் வாழ்ந்து கொண்டுள்ளன.

டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் காலமான தினமின்று!

பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் காலமான தினமின்று! 1861ம் ஆண்டு நைஸ்மித் நவம்பர் 6ஆம் தேதியன்று Ontario என்ற ஊரில் பிறந்தார். புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) உடற்கல்வி கல்வியைப் பயின்றார். நைஸ்மித்க்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். அமெரிக்கா சென்றா நைஸ்மித், மாசசூசெட்ஸில் உள்ள ஒய்.எம்.சி.ஏ சர்வதேச பயிற்சி கல்லூரியில் உடற்கல்வி துறையில் சேர்ந்து மாணவர்களுக்கு கற்பித்தார். மாணவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களைத் தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்பதும், ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல்ரீதியான தகுதி தேவை என்பதன் அடிப்படையில் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார். அதாவது பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதனுள் பந்தைப் போட முயன்று 1891இல் விளையாடியதே கூடைப்பந்து விளையாட்டு தோன்றக் காரணமாக அமைந்தது. ஆனாலும் கால்பந்து போன்ற ஆட்டங்கள் பிரபலமடைந்த சமயத்தில், உள் அரங்க (indoor) விளையாட்டுகளுக்கான முக்கியத்துவம் கருதி இதனை தோற்றுவித்தார்.ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு மிக வேகமாக சில வினாடிகளுக்குள் சென்று திரும்புவதே இந்த விளையாட்டு . .இந்த விளையாட்டு பிரபலமடைய கொஞ்ச காலம் ஆனாலும் தற்போது 250க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டுவருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்ததன் விளைவாக 1936ஆம் ஆண்டு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) மறைந்த தினம்

இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) மறைந்த தினம் இன்று l மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1827) பிறந்தார். பூ வியாபாரம் செய்துவந்தவர்கள் என்பதால் ‘புலே’ (பூக்காரர்) என்பது குடும்பப் பெயராகவே ஆகிவிட்டது. ஒரு வயதில் தாயை இழந்தார். தொடக்கக் கல்வியோடு நிறுத்திவிட்டு தந்தையின் கடைக்கு வேலைக்கு சென்றார். 13 வயதில் திருமணமும் ஆனது. l தந்தையின் நண்பர்களது உதவியுடன் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஜார்ஜ் வாஷிங்டன், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, கபீர், துக்காராம், தியானேஷ்வர் உள்ளிட்ட ஞானிகளின் கவிதைகள், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணாவின் நூல்கள் என பலவிதமான புத்தகங்களையும் படித்தார். தாமஸ் பெய்னின் ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ போன்ற நூல்கள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. l சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டு மனம் நொந்தார். தனிநபர் சுதந்திரம், சமத்துவம் எங்கும் பரவ வேண்டும் என்பதே இவரது லட்சியமாக மாறியது. சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். l இவர் சிறந்த எழுத்தாளர், கவிஞரும்கூட. ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ என இவரது பல நூல்கள் வெளிவந்தன. தனது படைப்புகளில் இலக்கிய நடை அல்லாமல் பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தினார். l கல்விதான் அனைத்துக்கும் தீர்வு என்பதை உணர்ந்தார். கல்வியைப் பரப்பும் பணியை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு கல்வி கற்பித்தார். 1851-ல் மகளிருக்கான பள்ளியைத் தொடங்கி, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பள்ளியை நடத்தினர். இவரது முனைப்புகளால் அரசுப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டன. l ‘தாய்மொழிக் கல்வி, 12 வயது வரை ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பு முழுவதும் அரசின் வசம் இருக்க வேண்டும். எண், எழுத்து, கணக்கு, பொது வரலாறு, புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவை அனைவரும் பெற வேண்டும்’ என வலியுறுத்தினார். l தீண்டாமை, பாலின பாகுபாட்டை கடுமையாக எதிர்த்தார். பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கம், தலித் இயக்கம், பெண் கல்வி இயக்கம், விவசாயிகளின் இயக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைத் தொடங்கினார். l ‘சத்ய ஷோதக் சமாஜ்’ என்ற அமைப்பை 1873-ல் தொடங்கினார். சமூகநீதி, சமத்துவம், தனிநபர் சுதந்திரம், சகோதரத்துவம், அனைவருக்கும் கல்வி, சிறப்பு இடஒதுக்கீடுகளுக்காக இந்த அமைப்பு போராடியது. l டாக்டர் அம்பேத்கர், ராஜா ராம்மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாகத் திகழ்ந்தவர். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது. l இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 63-வது வயதில் இதே நாளில் (1890) மறைந்தார்.

இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி மறைந்த தினம்

முதல் அணுக்கரு உலையை உருவாக்கிய இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி மறைந்த தினம். மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். மேலும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார்.

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள்

நவ.28, 1990 மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சிரிசம் என அழைக்கப்பட்டது. 1987-ம் ஆண்டும் மூன்றாவது முறையாக பிரதமரான இவர் அந்த காலக்கட்டத்தில் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே இவர்மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 1990-ம் ஆண்டு இதே நாள் தமது பதவியிலிருந்து விலகினார்.

செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள்

நவ.28, 1964 செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது. செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது. இந்த மரைனர் திட்டத்தின் கீழ் 10 விண்கலங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்ற மூன்றும் தொலைந்து போயின.

உலகின் மிகப் பழைமையான தேசிய அறிவியல் நிறுவனமான, ராயல் சொசைட்டி உருவாக்கப்பட்ட நாள்

நவம்பர் 28. இது இங்கிலாந்து, காமன்வெல்த் நாடுகள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அறிவியல் கழகமாகச் செயல்படுகிறது. அறிவியலையும் அதன் பலன்களையும் பரப்புதல், அறிவியல் திறன்களை அங்கீகரித்தல், சிறப்பான அறிவியல் பணிகளுக்கு உதவுதல், அரசின் கொள்கைகளுக்கு அறிவியல்பூர்வமான அறிவுரைகளை வழங்குதல், கல்வியில் பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்குதல் முதலானவை இதன் பணிகளாக உள்ளன. இயற்கை அறிவு, கணிதம், பொறியியல், மருத்துவம் முதலான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிற 52 பேர்வரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஃபெல்லோ ஆஃப் த ராயல் சொசைட்டி (எஃப்ஆர்எஸ்) என்ற கவுரவம் வழங்கப்படுகிறது. ஐசக் நியூட்டன், ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் இந்தக் கவுரவம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் அந்நிய உறுப்பினர்களுக்கான கவுரவம், சிறப்புக் கவுரவம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. 1597இல் தாமஸ் கிரேஷம் தன் உயிலில் குறிப்பிட்டிருந்தபடி, அவரது இடத்தில் கிரேஷம் கல்லூரி என்ற உயர்கல்வி அமைப்பு தொடங்கப்பட்டது. உண்மையில் இது மாணவர்களைச் சேர்க்கவோ, பட்டங்களை வழங்கவோ செய்யவில்லை. அறிஞர்களின் உரைகளின்மூலம், மேற்கொண்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பினை உருவாக்கியது. 1640களில் ராபர்ட் பாயில் தலைமையில் கூடி அறிவியல் செய்திகளைப் பகிர்ந்துகொண்ட அமைப்பு, தங்களை பார்க்கமுடியாத கல்லூரி என்று அழைத்துக்கொண்டனர். கிரேஷம் கல்லூரியின் இடத்தைப் பயன்படுத்திக்கொண்ட இந்தக் குழுவே, ராயல் சொசைட்டிக்கான முன்னோடியாகும். 1640, 50 களில் அமைப்பு ஏதுமின்றி இணைந்து செய்திகளைப் பறிமாறிக்கொண்ட அறிவியலாளர்கள், கிரேஷம் கல்லூரியின் குழுவினர் என்று அழைக்கப்பட்டனர். 1660இன் கிரேஷம் கல்லூரியின் குழுவினர் என்றழைக்கப்படும் 12 பேர் இணைந்து ராயல் சொசைட்டியைத் தொடங்கியபோது அதற்கு இந்தப் பெயரிடப்படவில்லை. ராயல் சொசைட்டி என்ற பெயர், அங்கீகரிக்கும் அரச பட்டயம் முதலானவை 1662, 1663 ஆண்டுகளில் வழங்கப்பட்டன. பின்னர், இது படிப்படியாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவியல் கழகமாக மாறியது.

வாஷிங்டன் இர்விங் (Washinton Irving) (ஏப்ரல் 3, 1793 – நவம்பர் 28, 1859) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் காலமான தினம்.

இவர் ரிப் வான் விங்கிள் (1819) மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ(1820) போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

1783-ம் ஆண்டு முதல் 1859-ம் ஆண்டு வரை வாழ்ந்த வாஷிங்டன் இர்விங் அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் வரலாற்றாசிரியர். மேலும், ஸ்பெயினில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை வடிவத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியதோடு, தனது சிறப்பான சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவராக அறியப் படுகிறார். மற்ற அமெரிக்க எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப் பவராக இருந்ததோடு, ஐரோப்பாவில் பாராட்டுகளைப் பெற்ற முதன்மையான அமெரிக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவராக விளங்கினார். எழுத்தாளர்களுக்காக தொடர்ந்து ஆதரவளிப்பவராக விளங்கியதோடு, எழுத்தாளர் களை பதிப்புரிமை மீறலில் இருந்து பாதுகாக்கக்கூடிய வலுவான சட்டதிட்டங்களுக்காக குரல் கொடுத்தார். # கண்ணீரில் ஒரு புனிதத்தன்மை இருக்கிறது. அவை பலவீனத்தின் அடையாளமல்ல, ஆற்றலின் அடையாளம். # இனிமையானது என்பது என்னவென்றால், தொலைதூர நண்பர்களின் நினைவாகும். # ஒரு கனிவான இதயம் மகிழ்ச்சியின் நீரூற்று, அது அருகிலுள்ள அனைத்தையும் புன்னகையாக மாற்றுகிறது. # தொடர்ந்து கற்கவும், வளரவும் மிகச்சிறந்த மற்றும் எளிமையான கருவிகளில் ஒன்று அதிகமாக செயல்படுவது. # சிறந்த மனமுடையவர்கள் நோக்கங்களைக் கொண்டுள்ளனர்; மற்றவர்களுக்கு விருப்பமே உள்ளது. # அன்பு ஒருபோதும் இழக்கப்படுவதில்லை. # சிறிய மனங்கள் துரதிர்ஷ்டத்தால் அடங்கி அடக்கப்படுகின்றன; ஆனால் சிறந்த மனங்கள் அவைகளுக்கு மேலாக உயர்கின்றன. # போதுமான அளவு என்பது மிகவும் குறைவாக இருக்கும் மனிதனுக்கு போதுமானதாக இருக்காது. # வயது என்பது உணர்வின் விஷயம்; வருடங்கள் அல்ல. # பயன்பாட்டுடன் கூர்மையாகக்கூடிய ஒரே கருவி நாக்கு மட்டுமே. # ஒரு தாயே நமக்கு உண்மையான நண்பர். # பிரகாசமான மனதில் இருண்ட நிழல்களைக் கொண்டுவருவதற்கு இரவின் அமைதி மற்றும் தனிமை போன்று வேறு எதுவுமில்லை.

எச். வி.ஹண்டே 98 ஆவது பர்த் டே

எச்.வி. ஹண்டே அரசியல்வாதி & மருத்துவர் .1967ல் சுதந்திரா கட்சிக்காக தேர்தலில் நின்று இருக்கிறார். அதன்பின் இவர் அதிமுகவில் இணைந்தார். தீவிர அதிமுக விசுவாசியான இவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதிமுகவிற்கு அடுத்தப்படியாக பாஜக கட்சியிலும் இருந்துள்ளார். முன்னதாக இவர் தீவிரமாக கருணாநிதியை எதிர்த்தார். பலமுறை கருணாநிதிக்கு எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார். 1980 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக தேர்தலில் நின்று 699 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது குறித்து இன்றளவும் சர்ச்சை உண்டு. எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்ட போது இவர்தான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர். இதற்காக அப்போது அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்தார். அதன்பின் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சைக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கி இருக்கிறாராக்க்ம் மேலும் சென்னை, அமைந்தகரையில்தான் நிறுவியிருக்கும் `ஹண்டே மருத்துவமனை’க்கு இன்றளவும் தினமும் பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...