இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
மாவீரர் நாளின்று!
தமீழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.
இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 இல் பிரகடனம் செய்யப்பட்டது. இங்ஙனம் நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாட்களுக்கு இந்த மாவீரர் நாள் ஒத்தது. ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
முதல் பெண் கணினி புரோகிராமர்- அடா லவ்லேசு நினைவு நாள்.
டிசம்பர்-10, 1815 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பிறந்தார்.தனது நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார்.
கண்டுபிடிப்புகள்:- 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். 1833 ஆம் ஆண்டு அடா தனது 17 வயதில் கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ்ஜியை சந்தித்தார். அடா கணித அறிவு மற்றும் திறன் ஆய்வில் சிறந்து விளங்கினார். பின், பாப்பேஜ் உடன் நட்பு தொடர்ந்தது. 1834 ஆம் ஆண்டு ,வேறுபாட்டுப் பொறி-Difference Engine என்ற கணக்கிட்டு இயந்திரத்தை முடிக்கும் முன்பே அவர் தனது இரண்டாவது முயற்சியாக பகுப்பாய்வு இயந்திரத்தை (Analytical Engine) உருவாக்க முடிவு செய்தார். பாபேஜ்க்கு வெளிநாட்டு ஆதரவு கிட்டியது. 1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர், லூயிஸ் மினிப்ரே தனது பகுப்பாய்வு இயந்திரத்தின் (Analytical Engine) ஆய்வுகளை வெளியிட்டார். லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வை தொடர்ந்து பாபேஜ்யும், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார். இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்நிலைப்படுத்திக்கொண்டார். பாப்பேஜ்யின் இயந்திர திட்டங்களை புரிந்து அல்கோரிதங்களை எழுதினார். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிக சிக்கலான செயல்பாடுகளை (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் கூறினார். சிறப்பு:- இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு “அடா நிரலாக்க மொழி” எனப் பெயரிடப்பட்டது.
வி.பி.சிங் – நினைவு நாள்
எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.
பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே “காவிரி நடுவர் மன்றம்” அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.
ஒரு முறை அவர் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் “யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” சொன்னார்.
ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
1989ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக எம்.பி. தொகுதிகள் தந்தது தமிழகமே.
தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மத ரீதியான பதட்டத்தைத் தணித்தார்.
சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். பாரத ரத்னா என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் Dr.அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த போது தான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தபோது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியான போது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த “Mr.Clean” என்ற பிம்பம் சரிந்தது.
எந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.
தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்தபோது பிடிவாதமாக மறுத்தார். “நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை”என்றார்.
ஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
தமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும் தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான”விஸ்வநாத் பிரதாப் சிங் ” என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.
அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. “ஒரு துளி வானம் ஒரு துளி கடல்” என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
வி.பி.சிங் உயிரோடு இருந்தபோது அவரது மகன் அஜய் சிங் “செயின்ட் கீட்ஸ்” என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர். ஆவணங்களை போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துகளை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
வி.பி.சிங் அரசியலின் அதிசயம். அவரை நினைவில் கொள்வோம்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் பாலம் பர்த் டே டுடே + சுலோச்சனா முதலியார் பற்றி கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட் இது :
1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து ‘சுட்டது’:-திருநெல்வேலி-பாளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும். படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது. படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை. 1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார். நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்……சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார். ஆலோசனைக் கூட்டமும், அரை லட்ச மதிப்பீட்டில் பாலம் கட்டத் தீர்மானமும்:- இதை ஒட்டி கேப்டன் பேபர், W.H. ஹார்ஸ்லி, நமது சுலோசன முதலியார் (தாசில்தார் பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்),கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர். உடனடியாகப் பாலங்கட்டத் தீர்மானிக்கப்பட்டது.கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வரைபடம் தயாரானது. 760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது. தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டின.லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது. திட்ட மதிப்பீடு அரை லட்சம். கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர். இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டிவிடும். ஆனால் மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார். பணத்திற்கு என்னசெய்வது? எங்கே போவது ? மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார், அதே சமயம் கலெக்டர். அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது. அது சரி யார் இந்த சுலோசன முதலியார்? திருமணம், தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர். இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள்தான், முதலியாரின் மூதாதையர்கள். கோடீ்ஸ்வரக் குடும்பம். வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம். கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம். குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர். நீளமான ‘அல்பேகா’ கருப்புக் கோட்டு், ஜரிகைத் தலைப்பா, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்கும். மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை. நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார். மனைவி வடிவாம்பாள், “கவலைப்படாதீர்கள்; தூங்குங்கள்; காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என, ஆறுதல் அளிக்கின்றார். சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி:- அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார். வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது.1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்குவதற்குமுன், கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே, இவர் தந்தை, இராமலிங்க முதலியார்தான். பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது . மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி. ஒரே மகன், வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது. என்றெல்லாம் நெஞ்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப்பொழுதைக் கழிக்கின்றார். ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார். அவரது தந்தை “மொழிப்பாலமாக” (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை, ‘ஆற்றுப் பாலத்தில்” போட முடிவு செய்கின்றார். கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவா போகி்ன்றார்? கலெக்டர் தாம்சன், சுலோசன முதலியாரைக் கட்டி்யணைத்த கதை:- மறுநாள் காலையில், கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார். சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும்,கொஞ்சம் பணத்தையும் “அச்சாரக் காணிக்கை” என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார். கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி. திக்குமுக்காடிப் போகின்றார். வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமல் போகின்றன. மரபுகள் உடைகின்றன. கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து “ஆலிங்கனம்” செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார். பாலத்திருப்பணிக்குக் தனிமனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை. கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார். பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது. அப்பேர்பட்ட பாலத்துக்குத்தான் இன்னிக்கு பரத் டே ஆமாமுங்க.. நம்ம நெல்லை–பாளை.,இரு நகரங்களை இணைக்கும் சுலேச்சனா முதலியார் பாலத்திற்கு இன்று (27ம் தேதி) 182வது வயது கொண்டாடப்படுது
ஆல்ஃப்ரெட் நோபல் பாரீசில் கையெழுத்திட்ட நாள்
1895 – நோபல் பரிசுக்கான நோபல் அறக்கட்டளையை உருவாக்க தன் சொத்தில் 94 சதவீதத்தை (அன்றைய மதிப்பில் 3,12,25,000 ஸ்வீடன் க்ரோனார்கள்) வழங்கும் உயிலில் ஆல்ஃப்ரெட் நோபல் பாரீசில் கையெழுத்திட்ட நாள் 1833 ஆகஸ்ட் 21 அன்று ஸ்வீடனில் ஒரு பொறியாளர்கள் குடும்பத்தில் பிறந்த நோபல், ஒரு பொறியாளர், வேதியிலாளர், கண்டுபிடிப்பாளர் மட்டுமின்றி பெரிய போர்த்தளவாட உற்பத்தியாளரும் ஆவார். போஃபர்ஸ் உட்பட 90 போர்த்தளவாட நிறுவனங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவர் 355 கண்டுபிடிப்புக்களுக்குக் காப்புரிமை பெற்றிருந்தாலும், அவரை உலகறியச் செய்தது டைனமைட்தான். இங்கிலாந்து உருவாக்கிய கார்டைட் உள்ளிட்ட, புகையில்லாமல் வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு, அடிப்படையாக அமைந்தது இவர் கண்டுபிடித்த பாலிஸ்டைட் என்னும் பொருள்தான். சுரங்கம் தோண்டுதல், மலைகளை, கற்களை உடைத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு டைனமைட் பயன்பட்டாலும், அழிவுப் பொருளை உருவாக்கியவராகவே நோபல் பார்க்கப்பட்டார். அவரது மறைவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது சகோதரர் லுத்விக் மறைந்தபோது, ஒரு ஃப்ரான்ஸ் செய்தித்தாள், நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, ‘மரண வியாபாரி மரணமடைந்தார்’ என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைப் படித்த நோபல், தன்னை உலகம் அவ்வாறு நினைவுகூருவதை விரும்பாததால், நோபல் பரிசை உருவாக்கினார். உயில் எழுதப்பட்டு ஓராண்டில், 1896 டிசம்பர் 10 அன்று நோபல் மறைந்துவிட, 1900 ஜூன் 29 அன்று ஒரு தனியார் நிறுவனமாக நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், உடற்கூறியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மனித குலத்திற்குப் பெரும் பயனளிக்கும் சாதனைகளைப் புரிவோருக்கு இப்பரிசு வழங்கப்படவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, 1901இலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. ஒரு நோபல் பரிசின் இன்றைய மதிப்பு சுமார் ஏழேகால் கோடி ரூபாய்களாம். 1966இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கைத் தனிமம், நோபலின் பெயரால் நோபலியம் என்று பெயரிடப்பட்டது.
பே டெல் முண்டோ பிறந்த நாள்
(Fe Villanueva del Mundo, OLD ONS OGH, நவம்பர் 27, 1909 – ஆகஸ்டு 6, 2011) பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தை மருத்துவராவார். இவர் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவியாவார். இவரே முதன் முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் குழந்தை மருத்துவத்திற்கான முதல் மருத்துவமனையை நிறுவியவர். பிலிப்பைன்ஸ் குழந்தை மருத்துவத்துறையில் எண்பதாண்டுகளைக் கடந்த முன்னோடியான இவரது சேவை போற்றப்படுகிறது. 1977 இல் இவர் ரமோன் மக்சேசே விருது மற்றும் அங்கீகாரத்திற்கான பன்னாட்டு விருது ஆகியவற்றினைப் பெற்றவர். 1980 இல் இவர் பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளராக உயர்வு பெற்றார். 2010 இல் இவர் ஆர்டர் ஆஃப் லகந்துலா என்ற சிறப்பினைப் பெற்றார். டெல் முண்டோ சாண்டோ டோமாஸ் பல்கலைக்கழகம் மற்றும் தூர கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற பல வசதிகளில் பணியாற்றினார், அங்கு அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குழந்தை மருத்துவத் துறையின் தலைவராக இருந்தார். இந்த நேரத்தில், அவர் குழந்தை மருத்துவத்தில் தொடர்ந்து உதவ ஒரு தனியார் பயிற்சியை நிறுவினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான கற்பித்தல் நிறுவனமான தாய்வழி குழந்தைகள் மற்றும் சுகாதார நிறுவனத்தையும் அவர் நிறுவினார். டெல் முண்டோவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று, 1957 இல் அவர் குழந்தைகள் மருத்துவ மையத்தை நிறுவியது, அங்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனையை இயக்குவதற்கான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளை உடைக்கும் முயற்சியில், அவர் மருத்துவ மையத்திற்கு நிதியளிக்க தனது வீட்டையும் தனது சொந்த உடைமைகளையும் விற்றார். மற்றும் பிலிப்பைன்ஸின் கிராமப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளை கொண்டு வந்தார். அவரது நடவடிக்கைகள் சுகாதாரப் பாதுகாப்பை இதுவரை அணுக முடியாதவர்களுக்குக் கொண்டு வந்தன, மேலும் நாட்டில் பல கீழ்மட்ட குடிமக்களுக்கு சிகிச்சை அளித்தன. பல தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு குறித்து கல்வி கற்பித்தார், தொற்று நோய்களைப் படித்தார், ஆராய்ச்சி செய்தார் மற்றும் பல மருத்துவ இதழ்களில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் “பிலிப்பைன்ஸின் தேசிய விஞ்ஞானிகளில்” ஒருவராகப் பெயரிடப்பட்ட முதல் பெண்மணியிவர்.