8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை!
கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விதமாக வூஹானின் ஹௌசின்ஷான் பகுதியில் சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று சீன அரசு அறிவித்திருந்தது.
சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய வகையில் இந்த மருத்துவமனை ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவமனை கட்டமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. கரோனா சிறப்பு மருத்துவமனை வெறும் 8 நாள்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
எனவே திங்கள்கிழமை முதல் இங்கு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1,400 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலாவது சிறப்பு மருத்துவமனையில் இருந்து 25 மைல் தொலைவில் லீய்சின்ஷான் பகுதியில் மற்றொரு சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்தும் பணியை சீனா அரசு மேற்கொண்டு வருகிறது.