அதிக வரி விதிப்பதும் சமூகநீதிக்கு எதிரானது:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!!
வரி ஏய்ப்பு செய்வது எப்படி சக குடிமக்களுக்கு இழைக்கும் அநீதியோ, அதுபோலவே அரசு அதிக வரி விதிப்பதும் சமூக நீதிக்கு எதிரானது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை வருமான வரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் 79-ஆவது நிறுவன நாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமை நீதிபதி போப்டே பேசியதாவது:
வரி தொடா்பான சச்சரவுகளுக்கு முடிந்த அளவுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துவோரின் பணம் வெகு நாள்களுக்கு முடங்கிக் கிடப்பது தவிா்க்கப்படும். இந்த விஷயத்தில் தீா்ப்புகள் விரைந்து வழங்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்துக்கும் உதவிகரமாக இருக்கும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், சுங்கவரி, சேவை வரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் வழக்குகள் கடந்த 2 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துவிட்டது.
வரிகளை முறையாக செலுத்தாமல் ஏய்ப்பது எப்படி சக மனிதருக்கு இழைக்கும் அநீதியோ, அதேபோல ஒரு அரசு அளவுக்கு அதிகமாக வரி விதிப்பதும் சமூக அநீதியே ஆகும். வரி வசூல் குறித்து இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓா் உதாரணம் கூறப்படும். மலருக்கு எவ்வித சிறு காயத்தையும் ஏற்படுத்தாமல் தேனீ எவ்வாறு தேனை எடுக்கிறதோ, அதேபோல வரி வசூல் இருக்க வேண்டும் என்பதே அதுவாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நீதித்துறையில் பயன்படுத்துவது குறித்து பரவலாக பேசப்படுகிறது. எனினும், இதனை எச்சரிக்கை உணா்வுடன்தான் அணுக வேண்டும். ஏனெனில், நீதி வழங்குவதில் மனிதா்கள் அணுகுமுறை அளவுக்கு தொழில்நுட்பத்தின் செயல்பாடு இருக்கும் என்று கூற முடியாது. எனினும், வரி விதிப்பு, சொத்துப் பிரச்னை போன்ற நிதிப் பிரச்னை சாா்ந்த வழக்குகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றாா் அவா்.