குடியரசு தினம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?
குடியரசு தினம்….
குடியரசு தினம் என்றால் நமக்கு தேசியக் கொடி நினைவுக்கு வரும். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவு வரும். சிலருக்கு தேச பக்தியை சிறப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் முக்கியமானது.
உலகிலுள்ள மக்கள் யாவரும் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றி செல்ல அவரவர் நாடு மிக முக்கியமானது. கண்டங்கள், நாடுகள் எல்லைகள் என எதுவும் இல்லையெனில் இங்கு எந்நாளும் எப்போதும் போர் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் கொதிநிலையில் வாழ்ந்து மடிவார்கள். அல்லது வலியர்கள் மட்டுமே ஜெயித்து எளியவர்களை விலக்கி வைத்துவிடுவார்கள்.
நமது நாடு பழமையான ஒரு நாடு. தற்போது உள்ளது போல பாரதம் அந்தக் காலத்தில் தனித் தனி மாநிலங்கள் இருக்காது. சிற்றரசு, பேரரசு என சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து அவரவர் எல்லையைப் பொறுத்து குறுநில மன்னர்கள், ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.
எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் பரங்கியர் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பிரிவினையை தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மன்னர்களிடம் நைச்சியமாகப் பேசி சூழலைப் பயன்படுத்தி நமது நாட்டுக்குள் வஞ்சகமாக நுழைந்து, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
மன்னர் கால ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாக தனித்து செயல்பட முடியாது. கருத்துக்களை கூற முடியாது. ஏன் தாமாக சிந்திக்கவும் கூட முடியாது. சுதந்திரம் பற்றி கனவு காண முடியாது. மன்னர் இறந்தால், அவருடைய நேரடி வாரிசு அடுத்த மன்னராகிவிடுவார். இத்தகைய முடியாட்சியின் வரி வசூல் செய்த ராச்சியங்களின் கொடுங்கோன்மையால் ஏழை எளியவர்களுக்கு துன்பமே மிஞ்சியது. அதன் பின் வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அளவில்லாமல் போனது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.