அறிவோம் திருமுருகாற்றுப்படை (6)/முருகனைப் போற்றும் முறை.
முருகனைப் போற்றும் முறை.
அறிவோம் திருமுருகாற்றுப்படை (6)
முருகனைப் போற்றும் முறை.
” ஆண்டாண் டாயினும் ஆகக் காண்டக முந்து நீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலூற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ இழை அணி சிறைப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றா கொற்றத்து விண்பொரு நெடுவரை குறிஞ்சி கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசை பேராள அலர்ந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே எள் பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் என பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோ என (250–280)
அவ்வவ்விடங்களிலே ஆயினும் பிற இடங்களிலேயாயினும் முருகன் அமர்ந்திருக்க அவன் உன்னை காணும்படி நீ முற்பட்டு அவனைக் கண்டக்கால் முகம் விரும்பிப் போற்றுதல் செய்து கையால் தொழுது கும்பிட்டு காலிலே பொருந்த விழுந்து வணங்கி நீண்ட பெரிய இமயமலையின் உச்சியில் நீலப்புல் தருப்பை வளர்த்த பசுமையான சுனையிலே விண், காற்று,நெருப்பு, நீர், மண் என்னும் ஐந்தின் தெய்வங்களுள் ஒருவனாக நெருப்புத் தேவன் அக்கினி பகவான் தன் அழகிய கையிலே ஏற்றவரக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்த ஆறு வடிவாய் அமர்ந்த செல்வனே! கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கடவுளின் மகனே! பெரிய மலையாகிய இமயமலையரசன் மகளாகிய உமையின் மகனே!பகைவருக்கு எமனே! வெற்றிவேல் ஏந்திய போர்த் தெய்வமாகிய கொற்றவையின் குமரனே! அணிகலன் பூண்ட பழம்பெரும் தெய்வமாகிய காடு கிழாளின் குழந்தையே! தேவர்கள் வணங்கும் வில்லேந்திய படைகளின் தலைவனே! மாலையணிந்த மார்பனே! நூல்களைத் தெளிந்த புலவனே! போர்த் தொழிலில் ஒப்பற்றவனே! பொருகின்ற வெற்றி வீரனே!அறிஞர்களின் புகழ்ச் சொல் மணியே! தெய்வானை, வள்ளி ஆகிய மங்கையர்களின் கணவனே! மற மைந்தர்களின் சிங்கமே! வேலேந்திய கைகளுடைய பெருமை சான்ற செல்வனே! கிரவுஞ்ச கிரியைப் பிளந்தவனே! விண்ணோடும் மோதும் நீண்ட மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்டவனே! பலரும் புகழும் நல்மொழி வழங்கும் புலவர்களின் தலைமையேற்
பெறுதற்குரிய நான் மரபினை உடைய பெரிய பெற்ற முருகனே! ஒன்றை விரும்பி வந்தோர்க்கு அதை நிறைவிக்கும் பெரும் புகழாளனே! துன்புற்றோருக்கு அருள் செய்கின்ற பொன்னேனி பூண்ட சேயோனே! வந்து மண்டி போதும் போர்களைக் கடந்த வெற்றியாடலுக்கு உரிய மார்பிலே பரிசில் வேண்டி வரும் அன்பர்களை தழுவித் தாங்கி காக்கின்ற, அன்பு அச்சத்திற்கு பய பக்திக்கு உரிய நெடிய செல்வனே! பெரியோர்கள் போற்றும் பெறலரும் பெயர் பெற்ற கடவுள் தலைவனே! சூரபத்மனின் குலத்தை வேரோடு அறுத்தவனே! ஆற்றலையும் வலிமையும் உடையவனே! போர்வல்ல மறவனே! மேலான கொடைத் தலைவனே என்றெல்லாம் பலவாறாக யான் அறிந்த அளவு நின்னைப் போற்றியும் மன நிறைவு பெறாதேனாய் நின் பெருமை முழுதும் அளவிட்டு அறிந்து போற்றுதல் உலகில் உள்ள உயிர்களுக்கு அரிதாகிலின் இயன்ற அளவு போற்றி நின் திருவடியைப் பெறக் கருதி வந்துள்ளேன். நின்னோடு ஒப்புமை இல்லாத புலமை உடையவனே! அடியேனுக்கு அருள் செய்க! என நக்கீரர் முருகனைப் போற்றி இப்பாடல் மூலம் திருமுருகாற்றுப்படையில் உணர்த்தியுள்ளார்.
முருக.சண்முகம்