உலக ‘சுனாமி’ விழிப்புணர்வு தினம்…!
சுனாமி என்ற வார்த்தையையே அறிந்திராத காலம் அது. கடல் சீற்றத்தை மட்டுமே பார்த்து பழக்கிய தமிழக கடலோர மீனவர்களுக்கு, கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மடிந்தன. சென்னை ,நாகை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 160-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.இது ஒரு ஜப்பானிய வார்த்தை.
உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய அந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. இந்த அளவானது 1964ம் ஆண்டு அலாஸ்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு இணையானது. அப்போது பதிவான அளவு 9.2. இது, இந்த நுாற்றாண்டின் நான்காவது பெரிய நிலநடுக்கம்.’உலகையே குலை நடுங்க வைத்த இந்த நில நடுக்கத்தால், சுமத்ரா தீவு நுாறு அடி வரையில் தென் மேற்காக நகர்ந்துள்ளது’ என்கின்றனர், புவியியல் ஆய்வாளர்கள். இதனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் ஆப்ரிக்காவில் சோமாலியா, கென்யா உட்பட பல பகுதிகளிலும் பாதிப்புகளை உண்டாக்கியது.
இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் சுனாமிக்கு பலியாயினர். இதை அடுத்து இந்த ஆழிப்பேரலை என்று தமிழில் சொல்லப்படும் சுனாமி குறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியாக, டிசம்பர் 2015 இல் ஐநா பொதுச் சபை (UNGA) நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.