தர்க்க சாஸ்திரம் 1 – ஆரூர் தமிழ்நாடன்

 தர்க்க சாஸ்திரம் 1 – ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 1

அதிகாலைச்  சிந்தனைகள்!

அதிகாலையில்… விழிப்பும் உறக்கமும் சங்கமிக்கிற நிலை கூட சுகமானதுதான்.

இந்த நிலையில் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழ்ந்துபோகவும் விருப்பம் இராது.

சட்டென எழுந்து உட்காரவும்  உடலும் மனமும் இடம் தராது..

அப்படியே ஆழ்ந்த தவத்தில் இருப்பதுபோல் அசையாமல் படுத்திருந்தாள் அகிலா.

காலைப் பறைவைகளின் சிணுங்கள்களும் கூவல்களும் காதில் கேட்கத்தான் செய்தது. போதாக்குறைக்கு அடுத்த பிளாட்டில் இருந்து ‘கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சத்யா பிரவர்த்ததே…’ என எம்.எஸ்.சுப்புலட்சுமி பகலை பக்குவமாய் எழுப்பிக்கொண்டிருந்தார்.

எனினும் அகிலாவுக்கு எழ மனமில்லை.

மனம் பல்வேறு திசைகளில் சிறகடித்தது. அதிகாலையில் விழித்ததும் அவள் மனம் இப்படித்தான் சிந்தனைக் குதிரைகளின் மீது ஏறிக்கொள்ளும்.

புத்தகங்களில் படித்த செய்திகள்,. சந்தித்த நண்பர்கள், அப்பாவுடன்

விவாதித்தது. அம்மாவுடன் பொய்ச் சண்டை பிடித்தது, சாலையில் தென்பட்ட காட்சிகள் இப்படி எதையாவது மையம் கொண்டு மனம் சுற்றிவரும்.

அலுப்பும் சுறுசுறுப்பும் சரி விகிதத்தில் இருக்கும் நிலை இது. உடல்

அலுத்துக் கிடக்கும். மனமோ சுறுசுறுப்பாக சுற்றிவரும்.

நேற்று சென்னை நகர் முழுக்க முளைத்த டிஜிட்டல் போர்டுகளில் தென்பட்ட ஞானகுரு அறிவானந்தரின் பக்கம் மனம் திடீரென்று மையம் கொண்டு நின்றது. வார இதழ்களில் இவர் பெயரில் வெளியான சில கட்டுரைகளைப் பார்த்திருக்கிறாள்.

ஆனால் படித்ததில்லை. ஏனோ படித்துப் பார்க்கவேண்டும் என்று கூட

அவளுக்குத் தோன்றியதில்லை. அந்த அறிவானந்தர் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் திரள் கூடுகிறதாம்.

ஒரு துறவிக்கு எதற்கு வால் பிடிக்க ஒரு கூட்டமும் விளம்பரமும்?

எல்லா வேட்கைகளையும் துறக்கவேண்டிய துறவிக்கு எதற்கு இப்படியொரு புகழ் வேட்கை? பத்திரிகைகளில் தன் படம் வெளிவரவேண்டும் என சாமான்யர்களைப் போல் ஆசைப்படுபவர்களைத் துறவிகள் என்று அழைக்கலாமா? என்றெல்லாம்  தானாய் அவளுக்குள் கேள்விகள் மிருதுவாய் மலர்ந்தன.

ராமகிருஷ்ணரும் ரமணரும் இவர்களைப் போலவா டாம்பீக வாழ்க்கை வாழ்ந்தார்கள்?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உயிர் கசிந்து பாடிய வடலூர் வள்ளலார், இவர்களைப் போலவா தனக்குத் தானே போஸ்டர் அடித்து ஒட்டிக்கொண்டார்? உண்மையான மகான்கள் தங்களுக்கு விளம்பர வெளிச்சத்தைத் தேடிக்கொண்டதில்லை.

இப்போதிருக்கும் சாமியார்கள், ஃபாரின் கார்களில் பவனி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களின் குளிர் பதன அறைகளில் தங்கி சுகம் காண்கிறார்கள். இளம்பெண்கள் புடைசூழ எப்போதும் காட்சிதருகிறார்கள். ஹைடெக் ஆசிரமங்களைக் கட்டிக்கொண்டு அத்தனை சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள். இத்தகைய ஆன்மீக வியபாரிகளை மீடியாக்களும் ஓடிஓடிச் சென்று தாங்கோ தாங்கென்று தாங்குகின்றன. மக்களும் அவர்களின் காலடியில் விழுந்து, கையில் இருப்பதையெல்லாம் கொட்டிக்கொடுத்துவிட்டு

பரிதாப ஜீவிகளாய் வளையவருகிறார்கள். ச்சே! என்ன உலகம் இது? எங்கும் தந்திரம். எதிலும் தந்திரம். எல்லா இடங்களிலும் தந்திரக்காரர்களின் வலை விரிப்புகள்.

அவள் மனம் ஏனோ கண்களை மூடிய நிலையில் இப்படியெல்லாம் யோசித்தது.

அகிலாவின் பெட்ரூமிற்குள், வேடுகட்டிய தலையோடும் காபிக் குவளையோடும் அம்மா காவேரி வந்தார்.

விழிமூடிப் படுத்திருந்த மகள் அகிலாவை ஒரு கணம் உற்று நோக்கினார்.

‘ஒரு தேவதையைப் பெற்றிருக்கிறேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது’- அவர் மனம் பெருமிதத்தில் பூரித்தது.

இருப்பினும் செயற்கையான கோபக்குரலை ஏற்படுத்திக்கொண்டு,

‘அகிலா விடிஞ்சிடிச்சி. இன்னும் எழலையா? இந்தா காபியைக் குடி” என அகிலாவின் முதுகைத் தட்ட…

‘ப்ளீஸ் விடும்மா. ஞாயித்துக் கிழமையில் கூட நிம்மதியாத் தூங்கவிட

மாட்டியா?” என்று சிணுங்கினாள் அகிலா.

‘பொம்பளைப் பிள்ளை விடிஞ்ச பிறகும் தூங்கினா குடும்பத்துக்கு ஆகாது’ என்றார் காவேரி.

‘அப்போ ஆம்பளைப் பிள்ளையா மாறிடவா?’என்றாள் அகிலா.

‘பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை.’ என அம்மா காவேரி எரிச்சல் காட்ட…

‘உன்னை மாதிரி ஒரு அன்பான அம்மா எனக்குக் கிடைச்ச பிறகு எனக்கு எதுதிலுமே குறைச்ச்சலில்லை’ என்றபடி எழுந்த அகிலா திடீரென அம்மாவைக் கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம் வைக்க, அம்மா காவேரியின் முகத்தில் வெட்கமான வெட்கம்.

பரபரவென எழுந்த அகிலா, பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பல் துலக்கினாள். காபி குடித்தாள். வந்திருந்த செய்தித் தாள்களை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு உடற்பயிற்சியில் வியர்க்க வியர்க்க இறங்கினாள். பின்னர் டவலோடு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

படுக்கையில் இருந்து எழுந்துவிட்டால், அகிலா ஒரு பட்டாம் பூச்சி.

துருதுரு சுறுசுறு என ஓயமாட்டாள்.

அவள் திடீர் முடிவுக்குவந்தாள்.

‘அந்த போஸ்டர் துறவி ஞானகுரு அறிவானந்தாவின் கூட்டத்திற்குப் போகவேண்டும். அவரைக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்கவேண்டும்.’

(தொடரும்)

1 பாகம் | 2 பாகம் | 3 பாகம் |

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...