‘நீரஜ் சோப்ராவுக்கு’ பிரதமர் மோடி வாழ்த்து..!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.