இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)

உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்

பருமனற்ற உடலே பாதுகாப்பானது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக இருப்பதை உடல் பருமன் என்கின்றனர். அதிகமான கொழுப்பு சேருவது உடல் நலத்திற்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாகும். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐராவதம் மகாதேவன் காலமான நாளின்று

மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞரான ஐராவதம் மகாதேவன் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியராவார்.

1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார். இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்து தோய்ந்தவர். உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞரும் கூட. வித்யாசகர் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்து வந்தார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த நாள் 

ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய மும்பையில் 164 பேரை கொன்று குவித்த பயங்கரவாதத் தாக்குதலின் 13-ம் ஆண்டு நினைவுதினம் இன்று.. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்தனர். மும்பை தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள், காவல் துறையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என 164 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்திய வரலாற்றில் மிகக்கொடூரமான பயங்கரவாத தாக்குதலாக அறியப்படும் மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் வேற்றுக்கிரகவாசிகள் குறுக்கிட்ட நாள்

புவியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் வேற்றுக்கிரகவாசிகள் குறுக்கிட்டு, எச்சரிக்கைச் செய்தியை ஒலிபரப்பியதாக நம்பப்பட்ட நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்ற நாள் இங்கிலாந்தின் இண்டிப்பெண்டண்ட் ப்ராட்காஸ்ட்டிங் அத்தாரிட்டி(ஐபிஏ) என்ற ஒழுங்காற்று அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த ஹன்னிங்ட்டன் ஒளிபரப்பு மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த செய்தியறிக்கையில் மாலை 5.10 மணிக்கு இடையூறு ஏற்பட்டது. முதலில் படம் சற்றுக் குலுங்கியபின், குழப்பமான ஒலிகள் கேட்டு, ஒளிபரப்பின் ஒலி மட்டும், சிதைவுற்ற ஒலிக்கு மாறி, சற்றேறக்குறைய 6 நிமிடங்களுக்கு ஒரு கரகரப்பான குரலில் ஒருவர் பேசியது ஒலிபரப்பாகியது. தன் பெயர் வ்ரில்லியன் என்றும், அஷ்தார் பால்வீதி மண்டல பாதுகாப்புத்துறையின் பிரதிநிதி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கருதுகோள்களை உருவாக்கியவர்களுள் ஒருவரான வான் டெசல், அஷ்தார் என்னும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி, முதன்முதலாக 1952இல் குறிப்பிட்டார். கவிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை(யுஎஃப்ஓ-பறக்கும் தட்டு!) சந்திப்பதற்கான தளம் ஒன்றை 1947இல் உருவாக்கிய இவர், 1952இல் அஷ்தார்களுடன் தொலையுணர்வின்மூலம்(டெலிபதி!) பேசியதாக அறிவித்ததைத்தொடர்ந்து இப்பெயர் புகழ்பெற்றது. இந்தப் பெயரைத்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பின் இடையில் ஊடுருவியவர் பயன்படுத்தினார். புவிக் கோளில் வசிப்பவர்களின் தவறுகளால் ஊழிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், அது பல்வேறு திருத்த நடவடிக்கைகளை புவியில் செய்து மனித இனத்தின் விதியை நிர்ணயிக்கும் என்றும், மனிதர்களின் தவறுகள் புவியைத் தாண்டித் தங்கள் கோள்களையும் பாதிக்கிற அழிவுகளை உருவாக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்த அந்த உரை, அந்த அழிவுகளைத் தடுக்க, தீமையான ஆயுதங்கள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் என்றும் எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, அச்சமுற்ற மக்கள் ஏராளமான தொலைபேசி அழைப்புகளை ஒளிபரப்பு நிலையத்திற்குச் செய்ததால், மறுநாளின் செய்தித்தாள்களில், யாரோ ஒரு வதந்தி பரப்புபவர், ஒளிபரப்பியைக் கைப்பற்றி, வதந்தி பரப்பியதாகவும், இவ்வாறு நிகழ்வது அதுவே முதல்முறையென்றும்(!) ஐபிஏ விளக்கமளித்தது. உலகம் முழுவதும் பரவிய இந்தச் செய்தி, வேற்றுக்கிரகவாசிகள்பற்றி ஏராளமான கதைகள் நிலவுவதும், அஷ்தார் என்பவர்களை முதலில் உலகிற்குச் சொன்னதுமான அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செயலைச் செய்தவர் யார் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், அன்றைக்கிருந்த தொழில்நுட்ப வசதிகளுக்குட்பட்டு, ஒளிபரப்பு நிலையத்திற்கு வெளியில் ஒளிபரப்பை இடைமறித்து, ஒலியை மட்டும் மாற்றுவது சாத்தியமா என்பது விளக்கப் படாததும், அது வேற்றுக்கிரகவாசிகளின் செய்தியல்ல என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டன.

எகிப்திய அரசர்களின் கல்லறைகள், மம்மிகள் முதலானவை கண்டுபிடிக்கப்பட்ட நாள்

1922 – எகிப்திய அரசர்களின் கல்லறைகள், மம்மிகள் முதலானவைபற்றி அதிகம் அறிய உதவியதும், சேதமின்றி முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டதுமான டுட்டன்காமுன் அரசரின் கல்லறைக்குள், அதைக் கண்டுபிடித்த ஆய்வாளர் ஹோவர்ட் கார்ட்டரும், ஆய்வுக்கு நிதியுதவி செய்த கார்னர்வோன் பிரபுவும் சென்ற நாள் 9 வயதில் அரசராகி, 19 வயதில், கி.மு.1323இல் இறந்துபோன இந்த அரசரின் கல்லறையில் அரியணைகள், தங்க அணிகலன்கள், அவர் பயன்படுத்திய பொருட்களுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 5,398 பொருட்கள் இருந்தன. இவற்றைக் கண்டுபிடித்துப் பட்டியலிட 10 ஆண்டுகள் ஆயின. ஒன்றினுள் ஒன்றாக மூன்ற சவப்பெட்டிகளுக்குள் இருந்த உடலுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மார்பு வரையிலான கவசம் 10 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. உட்புற சவப்பெட்டி 110 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது! ஆனாலும், கல்லறை சிறியதாக இருந்தது. எதிர்பாராமல் சிறு வயதிலேயே அரசர் இறந்ததால், பிரபு ஒருவருக்கு உருவாக்கப்பட்ட கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.மு.2700களில் தொடங்கிய பிரமிடுகளில் மம்மிகளைப் புதைக்கும் பழக்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருந்தது. பின்னர், அரசர்களின் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் பாறைகளாலான பல அறைகள் கொண்ட கல்லறைகளில், மறைக்கப்பட்ட கதவுகளுடன் மம்மிகள் புதைக்கப்பட்டன. அதில் கண்டுபிடிக்கப்பட்ட 62ஆவது கல்லறைதான் இது. எகிப்தில் உடல்களைப் பதப்படுத்தி மம்மியாக்குதல் கி.மு.2800களில் தொடங்கியது. மெழுகு என்று பொருள்படும் பாராசீகச் சொல்லான மம் என்பதிலிருந்து உருவான லத்தீன் மொழிச்சொல் மமியா, அரேபிய மொழிச்சொல் மூமியா ஆகியவற்றிலிருந்து பதப்படுதப்பட்ட உடல் என்னும் பொருள்படும் மம்மி என்ற சொல் உருவானது. இயற்கையாகக் கெட்டுப்போகாமல் கிடைப்பவையும் மம்மி என்றே அழைக்கப்படுகின்றன. இறந்தவர்களை பதப்படுத்தி மம்மியாக்குதல் உலகில் பல சமூகங்களிலும் காணப்பட்டுள்ளது. தென்னமெரிக்காவில் சின்காரோ (தற்போதைய சிலி) பகுதியில் எகிப்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.மு.7000களிலேயே மம்மியாக்கும் பழக்கம் இருந்துள்ளது. பிரமிடுகளும் கி.மு.6000களில் மெசபடோமியா தொடங்கி, உலகின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று ஹேப்பி பர்த் டே

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 ) 111 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்கு ஆண்டு காலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.இந்திய – ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில் வெப்பத்தை உள் வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில் அந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு தளத்திலும், ராட்சத இரும்பு உத்தரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன் மேல் நெருங்கிய இடைவெளியில் தேக்குமர கட்டைகள் பொருத்தப் பட்டுள்ளன.

வர்கீஸ் குரியன் பிறந்த நாளின்று

இந்திய வெண்மைப் புரட்சி நாயகர் என போற்றப்படுபவர் வர்கீஸ் குரியன். l கேரளத்தில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். டென்னிஸ், பேட்மின்டன், பாக்ஸிங், கிரிக்கெட்டில் திறமைசாலி. l தாய் வற்புறுத்தியதால் ராணுவ ஆசையைக் கைவிட்டு, டாடா இரும்பு எஃகு நிறுவனத்தில் (டிஸ்கோ) சேர்ந்தார். டாடா குழும இயக்குநரான தனது மாமா ஜான் மத்தாய் சிபாரிசு செய்தது தெரியவந்ததும் வேலையை ராஜினாமா செய்தார். l பிரிட்டிஷ் அரசின் உதவித் தொகையுடன், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பால் பண்ணை பொறியியல் பட்டமும், உலோகவியல், அணுசக்தி இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். l ஸ்காலர்ஷிப் நிபந்தனைப்படி, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள அரசு பால் பண்ணையில் வேலை பார்த்தார். அங்கு தண்டச் சம்பளம் வாங்குவது பிடிக்காததால், தொடர்ந்து அரசை நச்சரித்து வேலையில் இருந்து விலகினார். l அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் தலைமையில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. அவரது அழைப்பை ஏற்று, அந்த பால் பண்ணையை நவீனமயமாக்கம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். l கூட்டுறவு பால் உற்பத்தி தொழிற்கூடத்தை முழுமையாக மேம்படுத்தினார். ஏழை விவசாயிகளை முன்னேற்ற அவருக்குள் ஊற்றெடுத்த ஆர்வம் நிரந்தரமாக அவர்களுடன் இணைத்துவிட்டது. ஆனந்த் நகரம் இவரது கர்மபூமியானது. l கைரா மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கம் படிப்படியாக வளர்ந்து நாடு முழுவதும் வியாபித்து வெண்மைப் புரட்சியை மலர வைத்தது. ‘அமுல்’ (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) பால் பண்ணை, உலகப்புகழ் பெற்றது. பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி கேட்டதற்கு இணங்க, அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாக வெற்றிபெற வைத்தார். l ‘லட்சக்கணக்கான ஏழை மக்களின் ஆரோக்கியம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களை இந்த சமுதாயத்தின் ஆக்கத்திறன் படைத்த அங்கத்தினர்களாக மாற்றத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வர்கீஸ் குரியன்’ என்று ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார். l 24 மாநிலங்களில் 200 பால் பண்ணைத் தொழிற்கூடங்கள், 12 ஆயிரம் கிராமக் கூட்டுறவு சங்கங்கள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தினமும் 2 லட்சம் கோடி லிட்டர்பால் சேகரிப்பு என கிளை விரித்துள்ள அமுலின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல். l எண்ணற்ற தடைகளைத் தகர்த்து பால் உற்பத்தியில் உலகின் முதன்மையான தேசமாக பாரதத்தை உயர்த்திய வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் 90-வது வயதில் 2012-ல் காலமானார்.

இங்கிலாந்திலுள்ள பான்க்கசல்ட்டே கட்டுக்கால்வாய் திறக்கப்பட்ட நாள்

1805 – உலகின் மிக உயரமான கட்டுக்கால்வாயான (படகுப் போக்குவரத்துப் பாதை), இங்கிலாந்திலுள்ள பான்க்கசல்ட்டே கட்டுக்கால்வாய் திறக்கப்பட்ட நாள் வெல்ஷ் மொழிப் பெயரான இதற்கு கசல்ட்டே பாலம் என்று பொருள். கட்டுக்கால்வாய் என்பது நீரைக் கொண்டுசெல்ல ‘கட்டப்படுகிற’ கால்வாய் ஆகும். இது சாதாரணக் கால்வாய் போல, வெறுமனே தோண்டப்பட்டதாக இல்லாமல், தரையிலோ, தரைக்கு அடியிலோ, தலைக்கு மேலேயோ ‘கட்டப்பட்டதாக’ இருக்கும். பெரிய அளவிலான கட்டுக் கால்வாய்கள், நீரைக் கொண்டு செல்வதற்காக மட்டுமின்றி, படகுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கும் பண்டைய காலந்தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேல்சிலுள்ள லாங்கோலன், டென்பிக்ஷையர் நகரங்களை இணைக்கிற லாங்கோலன் கால்வாயின் பாதையில், டீ பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இப்பள்ளத்தாக்கில் ஓடுகிற, இங்கிலாந்துப் பகுதிக்கும், வேல்ஸ் பகுதிக்கும் எல்லையாக அமைந்து டீ ஆற்றுக்கு மேலே, 126 அடி உயரத்தில் இந்தக் கட்டுக்கால்வாய் அமைக்கப்பட்டு, அவ்வளவு உயரத்தில் படகுகள் பயணித்தன! கால்வாய்களில் பயணிப்பதற்காகவே உருவாக்கப்படும் குறுகிய படகுகள் என்ற வகைப் படகுகள் பயணிக்கும் வகையில், 12 அடி அகலத்தில் இக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு உயரத்தில், ஐந்தேகால் அடி ஆழத்துடன், 18 கற்றூண்களின்மீது வார்ப்பிரும்பால், 1007 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இதுதான் இங்கிலாந்திலேயே மிக நீளமான கட்டுக் கால்வாய். 1705இல் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நீடித்த இதன் கட்டுமானப் பணிகளுக்கு 47 ஆயிரம் பவுண்டுகள்(தற்போது சுமார் ரூ.38 கோடி) செலவானது. அக்காலத்திய இங்கிலாந்தின் ஜிடிபியோடு ஒப்பிட்டால், அது மிகப்பெரிய தொகை! இதை நிரப்புவதற்குத் தேவையான 15 லட்சம் லிட்டர் தண்ணீர், அருகிலுள்ள குதிரை லாட அருவியிலிருந்து கொண்டுவரப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்காக, தண்ணீரை வெளியேற்றி இரண்டு மணி நேரமானது. ரயில் போக்குவரத்துப் பரவலான நிலையில், 1846இல் இதை வாங்கிய (தனியார்) ரயில் நிறுவனம், இதனை ரயில் பாதையாக்கத் திட்டமிட்டாலும் நிறைவேற்றவில்லை. 1939இல் இதில் படகுப் போக்குவரத்து முழுமையாக நின்றுபோய்விட, பராமரிப்பில்லாத நிலையில், 1945இல் உடைப்பு ஏற்பட்டு, அருகிலிருந்த ரயில் பெட்டிகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனாலும், மீண்டும் சரி செய்யப்பட்டு, ஷ்ரோப்ஷையர் ஒன்றிய கால்வாய்க்கு நீரைக் கொண்டுசெல்லும் கால்வாயாக இது மாற்றப்பட்டது. இதனை உலகப் பண்பாட்டுக் களமாக யுனெஸ்கோ அறிவித்துப் பாதுகாக்கிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...