Renault: கார் வாங்குற ஆசை இருந்தா இந்த வாரமே வாங்கிடுங்க…
புத்தாண்டிலிருந்து விலை உயரப் போகுது!
ஜனவரி மாதத்திலிருந்து அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தப் போவதாக ரினால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ரினால்ட், இந்தியாவில் நிசான் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவப்பட்டுள்ள ரினால்ட் நிசான் ஆலையில் கார்கள் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் மந்தநிலையால் ரினால்ட் நிறுவனமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, உதிரிப்பாகங்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் விலையை உயர்த்த ரினால்ட் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் ரினால்ட் நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ரூ.2.3 லட்சம் முதல் ரூ.12.99 லட்சம் வரையில் விலை கொண்ட கார்களை இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கார்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. புத்தாண்டு பிறந்தால்தான் தெரியும் எந்தெந்த காரின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்று!
கார்களின் விலை உயர்வு குறித்த இந்த அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல… ஏற்கெனவே மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், டொயோடா, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துவிட்டன. எனவே புத்தாண்டிலிருந்து கார் வாங்க நினைப்பவர்கள் அதிகமாகச் செலவிடவேண்டியிருக்கும். நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும் இச்சூழலில் மக்களிடையே நுகர்வும் குறைந்துள்ளது. நிலைமை இவ்வாறிருக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன விற்பனை குறைந்து இழப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஜனவரி – மார்ச் காலாண்டின் முடிவில்தான் இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம்!