வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை:
வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வா், துணை முதல்வா் வீடுகளிலும்,தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறைக் காவலா், உடனடியாக காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த உயா் அதிகாரிகள், முதல்வா், துணை முதல்வா் வீடுகளில் சோதனையிட உத்தரவிட்டனா். அதேபோல, தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டனா். இருவரது வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதேபோல் சென்னை தலைமைச் செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அங்கும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் குண்டு எதுவும் அங்கு கைப்பற்றப்படவில்லை. இதனால் தலைமைச் செயலகத்தில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.