உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 8 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 8 – சுதா ரவி
8
தோல்வியின் வலியை உணர்ந்தவர்கள்  உடைந்து போயினர்…ஆர்ஜே வந்த பிறகு இதுவரை பல சண்டைகள் மோதல்கள் ஏற்பட்டாலும் இந்த முறை தான் அவர்களுக்கு மிகப்பெரிய அடி.
வீட்டில் இருந்த தாண்டவத்துக்கோ மகன்களிடம் இருந்து போனும் வரவில்லை தான் அடித்தாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றதும், எதுவோ எங்கோ தவறு நடந்து விட்டது புரிந்து போய் அடுத்த என்ன என்று குழம்பி நின்றார்…வீடு முழுவதும் குளிர்சாதனத்தின் உதவியால் குளிரூட்டபட்டிருக்க…அந்த குளிரிலும் அவர் உடம்பு முழுவதும் உள்ளத்தின் புழுக்கத்தின் காரணமாக வியர்த்து வழிய ஆரம்பித்தது……..சிறிது நேர யோசனைக்கு பின் பெரிய மருமகளை எழுப்பி லோட் இறக்க சென்றஇடத்தில் பிரச்சனை இருப்பதால் தான் சென்று பார்த்து வருவதாக சொல்லிக் கிளம்பினார். மனைவியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்.
அவரின் முகத்தில் தெரிந்த குழப்பத்தில் மருமகளுக்கும் எதுவோ சரியில்லை என்று புரிந்தாலும் மாமனாரிடம் கேட்க பயந்து பேசாமல் இருந்து விட்டாள். அந்த அர்த்த ராத்திரியில் தாண்டவத்தின் கார் கடற்கரையை நோக்கி சீறிப் பாய்ந்தது. காரை தானே ஒட்டிக் கொண்டிருந்தாலும் மனமோ காரை விட முன்னே சென்று கடற்கரையிலேயே நின்றது. மகன்களுக்கு எதுவும் ஆபத்து வந்து இருக்குமோ என்கிற பயம் எழுந்தது.
இத்தனை வருடம் கடத்தல் தொழிலில் இருந்தாலும் ஆர்ஜேவை போன்று மோசமான கொலைகளை நிகழ்த்தியது இல்லை. இப்படி பல எண்ணங்களுடன் போராடியபடி கடற்கரையில் போய் காரை நிறுத்தியவர் அங்கு ஆட்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்ததையும், சிலர் படகுகள் எடுத்து வந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்ததையும் கண்டார். அதுமட்டும் அல்லாது போலீஸ் படை வேறு அங்கு நின்று கொண்டிருந்தது. நடுக்கடலில் நாலைந்து படகுகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததையும் கண்டார்.
சிறிது நேரத்திலேயே தன்னை சமாளித்துக் கொண்டவர் மெல்ல தன் கண்களை சுழற்றி தன் ஆட்களோ, லாரிகளோ அங்கு இருக்கிறதா என்று பார்த்தார். அவை இருந்ததற்கான அடையாளமே இல்லை என்பதை உணர்ந்ததும் பெருமூச்சு எழுந்து மறைந்தது. இத்தனை வருட தொழில் அனுபவத்தில் தன் உணர்வுகளை வெளியே காட்டாமல் இருப்பதற்கு நன்கு பழகி இருந்தார்.
அந்த நேரம் அங்கு இருந்த டிஎஸ்பி தாண்டவத்தின் அருகில் வந்தார். தாண்டவம் அவரை பார்த்தது” என்ன சார் பிரச்சனை ? ஏதோ கடற்கரையில் படகுகள் தீ பிடிச்சு போச்சுன்னு சொன்னாங்க எப்படி?”என்று கேட்டார்.
“நீங்க ஏன் சார்  இந்த நேரத்துல போய் இங்கே கிளம்பி வந்து இருக்கீங்க?…இது வழக்கம் போல தான் இந்த மீனவ குப்பத்துல இருக்கிற பசங்க ரெண்டு குரூப்போட பிரச்சனை. ரொம்ப நாளா ஒருத்தர் மேல்ஒருத்தர் பகையோட சுத்திகிட்டு இருந்தானுங்க……..இன்னைக்கு எதிரி ஆளுங்க படகுங்க ஆள் இல்லாம சிக்குனதும் கொளுத்தி விட்டுட்டானுங்க………..இவனுங்களோட இதே இம்சையா போச்சு சார்……ராத்திரில கூட நிம்மதியா தூங்க விட மாட்டேன்றாங்க….”
“ஒ..அது தானா……..எல்லாம் சின்ன பசங்க  ஒருத்தன் மேல ஒருத்தன் கடுப்பில திரியிறானுங்க.பார்த்து ரொம்ப அடிச்சிடாம புத்தி சொல்லி அனுப்பி விடுங்க”என்றார் தாண்டவம்.
அவரின் பேச்சை கேட்டு” நீங்க பெரிய மனுஷன் சார் இப்படி தான் சொல்வீங்க.நான் பார்த்துக்கிறேன்.ஒவ்வொருத்தனுக்கும் தனித் தனியா லாடம் கட்டினா போதும்.”
போலீஸ் ஆபிசரிடம் சொல்லிக் கொண்டு தன் காருக்கருகே வரும் போது யாரோ தன்னை குறுகுறுவென்று பார்ப்பது போல் தோன்ற அவசரமாக திரும்பி அங்கிருந்த கூட்டத்தினுள் தன் கண்களை ஓட விட்டார். அவர் திரும்பி பார்க்கிறார் என்று தெரிந்ததும் ஒருவன் தன்னை அவசரமாக மறைக்க முயன்றான். ஆனால் தாண்டவத்தின் கண்களில் இருந்து அது தப்பவில்லை. இனி மறைய முடியாது என்று தெரிந்ததும், அவன் நேரே நின்று தாண்டவத்தை பார்த்தான். இருவரின் கண்களும் ஒரு முறை சந்தித்து பிரிந்தது.
பின் உடனே அங்கிருந்து  கிளம்பியவர் நேரே பாக்டரிக்கு சென்றார். அந்த நேரத்திலும் பாக்டரியில் ஆட்கள் கூடி கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர். தாண்டவத்தை பார்த்ததும் அனைவரும் பள்ளி முதல்வரை கண்ட குழந்தைகள் போல பவ்யமாக நின்றனர். அங்கு நின்றிருந்த ஒருவனிடம்”தம்பிங்க எங்கே, உள்ள இருக்காங்களா” என்று கேட்டார்.
அவன் உடலை வளைத்து நெளித்து நின்று கொண்டு” இருக்காங்க ஐயா” என்று கூறினான்.
உள்ளே விடு விடுவென்று நடந்த தாண்டவம் மகன்கள் இருவரும் இருந்த தன் ஆபீஸ் அறைக்கு வந்தார். நேரே சென்று கந்தனின் சட்டையை பற்றித் தூக்கியவர்” என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க? நம்ம கையை விட்டு போனது எவ்வளவு பெரிய வியாபரம்ன்னு தெரியுமா?”என்றார் ஆத்திரமாக.
அவரின் கோவத்தில் குமாரவேல் அவரிடம் சென்று…” தெரியும் பா…..நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அவன் நடுக்கடலில் வந்து தாக்குவான்னு.”
அவனை பார்த்து முறைத்துக் கொண்டே” நம்ம ஆட்கள் முன்னமே கடலில் சுத்திக் கிட்டு தானே இருந்தாங்க……..அப்புறம் எப்படி திடீர்ன்னு வந்தான்.”
அவரின் கேள்வியில் பதில் தெரியாமல் தலையை குனிந்து கொண்டான். அவர்களின் இயலாமையை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்ட தாண்டவம்……”சை…..பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க இனி தொழிலை அவங்க பார்த்துக்குவாங்கன்னு நினைச்சேன்…………ஆனா ஒன்றுக்கு மூணு பிள்ளை இருந்து.எல்லாமே தண்டம்”என்று சொல்லி தலையிலடித்துக் கொண்டார்.
இருவரும் ஒன்றும் பேசாமல் நிற்கவும். எரிச்சலாகி போன தாண்டவம்…..” எனக்கு போன சரக்கு எல்லாம் என் கைக்கு வரணும்.நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது..உங்களுக்கு ரெண்டு நாள் டைம் அதுக்குள்ளே அந்த சரக்கு இங்கே வந்தாகணும் சொல்லிட்டேன்.”
அதற்கும் அவர்கள் பதில் பேசாமல் இருக்கவும்” என்னங்கடா நான் கேட்டுகிட்டே இருக்கேன்……..இன்னும் என்னென்ன பிரச்சனையை இழுத்து வச்சு இருக்கீங்க தெரியுமா?”என்று ஆங்காராமாக கேட்டார்.
அவர் கேட்டதும் இருவரும் ஒன்று போல்”இதுல தான் பா நாங்க ஏமாந்துட்டோம்………மத்தபடி நாங்க செய்யுற ஒவ்வொன்னும் சரியா தான் செய்வோம்” என்றான் கந்தவேல்.
“கிழிச்சீங்க!அந்த கார்த்திகேயனை என்ன பண்ணுனீங்க?”
கந்தனை முந்திக் கொண்டு “அவனை சிதம்பரத்துக்கு வர வழியிலேயே ஆளை வச்சு முடிச்சாசுப்பா” என்றான் குமார்.தலையை வேகமாக ஆட்டி “எதுக்குமே “லாயக்கில்லாத பயலுகடா நீங்க! இதோ இப்போ அவனை கடற்கரையில பார்த்துட்டு வரேன்…….ஹ்ம்ம்..ஹ்ம்ம்..இனி சரி வராது நானே இறங்கினா தான் உண்டு…………உங்களை நம்பினா வேலைக்கு ஆகாது”என்றார் சலிப்புடன்.
அவர் சொன்ன செய்தியில் அதிர்ச்சியாகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க”என்ன பார்க்குறீங்க நம்ம கிட்டே இருந்து சரக்கு வெளில போனதுல தான் பிரச்சனைன்னு அவன் கண்டு பிடிச்சான் வை அடுத்த நிமிஷம் நம்ம பாக்டரிகுள்ளே போலீஸ் வரும்”என்றார்.
“ அவன் எப்படி தப்பிச்சான்னு தெரியலப்பா…..எங்களை மன்னிச்சிடுங்க இனி நாங்க கவனமா இருக்கோம்.இப்போ என்ன பண்ணலாம்ன்னு நீங்களே சொல்லுங்க?”என்றான் கந்தவேல்.
சற்று யோசித்து விட்டு” நான் ஆர்ஜேவை சந்திக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க.எனக்கு அவன் கிட்ட டீல் பேசணும்..இனியும் அவனை வளர விடக் கூடாது.”என்றார் உறுதியுடன்.
“அவன் யாரையும் பார்க்கிறது இல்லை பா.இதுவரை அவனை நேருக்கு நேரா யாரும் சந்திச்சது இல்லைன்னு கேள்விபட்டேன்” என்றான் குமாரவேல்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது என்ன செய்வீங்களோ அவனை நான் பார்க்கணும். அப்புறம் இந்த கார்த்திகேயனை உங்க கண் பார்வையிலேயே வைங்க..அவன் நம்மை மீறி எதுவும் செய்ய கூடாது.”
அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டதும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார் தாண்டவம்.
பில்லுமேட்டில் நல்ல உறக்கத்தில் இருந்த உத்ரா வீட்டின் வெளியே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதும் தூக்கம் கலைந்து அவசரமாக எழுந்து நின்றாள். அவன் வந்து விட்டான் போல இருக்கே என்று எண்ணியவள் தன் சேலையை சரி செய்து கொண்டு அவன் வருகையை நினைத்து பதட்டத்துடன் நின்றாள்.படாரென்று கதவு திறக்க வேகமாக உள்ளே வந்த ஆர்ஜே அவளை இறுக்கி அணைத்தான்……அவன் அணைப்பில் இருந்து விடுபட போராடி கடைசியில் அவனே விடுவித்த பின் கண்களில் கண்ணீருடன் அவனை நோக்கினாள்.
அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன் “நான் ஜெயிச்சிட்டேன் ஏஞ்செல்!நான் ஜெயிச்சிட்டேன்!என்னுடைய இத்தனை வருஷ கனவு……நான் ஜெயிச்சிட்டேன்!.இதுக்கு காரணம் நீ……நீ…….மட்டும் தான்!”…….என்று சொல்லி சத்தம் போட்டு சிரித்தான்.
அவனின் சிரிப்பில் மிரண்டு போய் ஓரடி பின்னே போக அவன் உடனே எழுந்து வந்து அவள் நெற்றியோரம் இருந்த முடியை ஒதுக்கி அவளை பார்த்துக் கொண்டே………….”நீ என் கூட இருந்தா இந்த சிதம்பரம் என்ன உலகத்தையே என் கிட்ட கொண்டு வந்துடுவேன்……இந்த உடம்புல ஓடுற ஒவ்வொரு அணுவும் உன்னை தாண்டி தேடுது என்று தாபத்துடன்  கூறினான்..
அவனின் நடவடிக்கையில் பயந்து போனவள் சுவற்றோரம் பல்லி போன்று ஒட்டிக் கொண்டாள். ஆனால் அவனோ அதன் பிறகு அவள் அருகிலேயே வராமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளை பார்த்த விழி பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவனது பார்வை வீச்சில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தாள்…….சிறிது நேரம் கழித்து வேகமாக எழுந்தவன் அவள் அருகில் வந்து”நான் இப்போ ஜெயிச்சது எல்லாம் பெருசு இல்லடி இதோ இந்த கண்களில் அன்னைக்கு என்னை காணும்ன்னு தேடி அலைபாய்ந்து ஆடுனியே…அந்த தாபம் எனக்கு வேனுண்டி…….இந்த உதடுகளில் உள்ள ஈரத்தை நான் உணரனும்…நீ எனக்கு வேணும் உத்ரா..நீ எனக்கு வேணும்”என்று தாபம் தாங்காமல் அவன் பேச..அதை கேட்டவளின் கண்களோ கண்ணீரை பொழிய….அதை பார்த்ததும் அதுவரை ஆழிப் பேரலையாக பொங்கிய உணர்வுகள் அடங்கிப் போக……அவள் முன்னே நின்று….”ஏண்டி ..ஏண்டி ….ஏன்…உனக்காக இந்தஉலகத்தையே உன் முன்னே கொண்டு வந்து தர தயாராயிருக்கேன்……ஏன் உனக்கு என்னை பிடிக்கல சொல்லு பேபிமா…சொல்லு…..உன் காதல் எனக்கு வேனுண்டி”என்று   ஒரு சிறு பெண்ணின் முன் கெஞ்சிக் கொண்டிருந்தான்…
அவள் முன்னே நின்று கெஞ்சியவனை பார்த்து உத்ராவின் மனம் ஒரு நிமிடம் இரக்கப்பட்டது. என்ன இல்லை இவனிடம் அழகான உருவம், ஆளுமை நிறைந்த குணம் பார்த்தவுடன் வசீகரிக்கும் முகம் என்று எல்லாம் இருந்தும் விரும்பாத ஒரு பெண்ணிடம் காதலை சிக்கிறானே….யாசித்து பெறக் கூடிய ஒன்றா காதல்……அது பூ போன்று தானாக மலர வேண்டாமா? அவன் நினைத்திருந்தால் இந்த நான்கு வருடத்தில் தன்னை எடுத்துக் கொண்டிருக்கலாமே ஆனால் தன் முன்னே நின்று கெஞ்சிக் கொண்டிருப்பவனை பார்த்தது அவள் மனம் வருந்தியது….காதலின் அர்த்தங்கள் புரிந்தவனுக்கு அது வற்புறுத்தியோ , கெஞ்சியோ வரவழைக்க முடியாது என்று புரியாமல் போனது விதியின் செயலோ.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...