நீயெனதின்னுயிர் – 9 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 9 – ஷெண்பா
9
கடுகடுத்த முகத்துடன் ஹோட்டலின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த ராகவ், பெண்களின் நகையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன், சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட எண்ணினான். ஆனால், அவனைப் பார்த்துவிட்ட சீமா, கையசைத்து நலம் விசாரிக்க, வேறு வழியின்றி அவர்களருகில் சென்றான்.
“ஹலோ மேடம்! நல்லாயிருக்கேன்” என்றபிறகு, அவளது நலத்தையும் விசாரித்துக்கொண்டான்.
“ஹலோ சார்!” என்றவனுக்கு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக்கினான் விக்ரம்.
ராகவின் நிலையோ தர்மசங்கடமாக இருந்தது. நிற்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல் தவிப்புடன் இருந்தான்.
வைஷாலி அவர்கள் இருவரின் முகங்களையும் ஆராய்ந்தாள். அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. ராகவ் வெளிப்படையாகக் காட்டும் அனைத்து உணர்ச்சிகளையும், விக்ரம் உள்ளடக்கியபடி அமர்ந்திருந்தான். அவன் மீது பரிதாபம் தோன்றியது.
“என்ன ராகவ், இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?” என்று கேட்டு, அங்கே நிலவிய இறுக்கமான, மௌனத்தை மாற்ற எண்ணினாள் சீமா.
“ஃப்ரெண்ட் ஒருத்தரைப் பார்க்க வந்தேன் மேடம்!” என்றவன் ஓரப் பார்வையால் விக்ரமைப் பார்த்தான். அவனோ, இருகைகளையும் கோர்த்துத் தாடையைத் தாங்கியபடி அமர்ந்திருக்க, “சரி மேடம், நான் கிளம்பறேன்; நேரமாகுது” என்றான் ராகவ்.
“நீங்களும் எங்களோடு ஜாயின் பண்ணுங்களேன் மிஸ்டர். ராகவ்” என்ற வைஷாலியை, லேசாக இமைகளை உயர்த்திப் பார்த்தான் விக்ரம்.
“பரவாயில்ல வீட்ல…” என்று அவன் சொல்ல ஆரம்பிக்க, “உட்கார் ராகவ்! டின்னர் முடிச்சிட்டுப் போகலாம்” என்று தன் அருகிலிருந்த இருக்கையைச் சுட்டிக்காட்டினான் விக்ரம்.
லேசாகப் புன்னகைத்தவன், “தேங்க்யூ சார்…” என்றபடி அவனருகில் அமர்ந்தான்.
உணவை ஆர்டர் கொடுத்துவிட்டுப் பெண்கள் இருவரும் மெதுவான குரலில் பேசிக்கொள்ள, விக்ரம் சற்று ஒதுக்கத்துடனும், ராகவ் ஒரு எதிர்பார்ப்புடனும் அமர்ந்திருந்தனர்.
வரிசையாக கொண்டுவந்து அடுக்கப்பட்ட உணவு வகைகளைப் பரிமாற வந்த வெய்ட்டர்களை அனுப்பி விட்டு, தாங்களே பரிமாறிக்கொண்டனர். தட்டை எடுத்த விக்ரம், ராகவின் தட்டில் பரிமாறினான்.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத ராகவ், “சார்!” என்று திகைப்புடன் அவனது கரத்தைப் பற்றினான்.
“ஹேய்! சாப்பிடு மேன்” என்று அழகாகப் புன்னகைத்தான் விக்ரம்.
பற்றிய கையை விடாமல் நெகிழ்ந்து போனவனாக, தழுதழுத்த குரலில், “சாரி சார்” என்றதும், “மீ டூ ராகவ்” என்று பதிலுரைத்த விக்ரமும் இளகியிருந்தான்.
இருவரையும் பார்த்த வைஷாலிக்கு, விக்ரம் மீது இருந்த அபிமானம் மேலும் உயர, அவனைப் பார்த்து ஸ்நேகத்துடன் புன்னகைத்தாள். கசிந்திருந்த ஈரத்தை வெளிக்காட்டாமலிருக்க, கருமணிகளை சுழற்றினாள். அவளது மனம் நிலை கொள்ளாமல் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க, கைகள் தட்டிலிருந்த உணவை அளைந்து கொண்டிருந்தது.
ராகவ், சீமா இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், வைஷாலியைக் கவனிக்கத் தவறவில்லை விக்ரம்.
“வைஷாலி! எப்பவும் ராகவை வம்பிழுப்ப, இன்னைக்கு என்ன அமைதியாக இருக்க?” என்று வேண்டுமென்றே கேட்டான் விக்ரம்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “ஏன் சார் என் வாயைப் பிடுங்கறீங்க? நான் சும்மா இருந்தாலும், நீங்க இருக்கமாட்டீங்க போலிருக்கே. நான் ஏதாவது சொல்லி, உடனே நீங்க – வைஷாலி! ராகவைப் பத்தி உனக்குத் தெரியாது. அவனை மாதிரி ஒருத்தனைப் பார்ப்பது ரொம்பக் கஷ்டம். நீ ஏன் எப்போ பார்த்தாலும் அவனை வம்பிழுத்துட்டு இருக்க?  அப்படின்னு கேட்கவா” என்று அவனைப் போலவே பேசிக்காட்ட, அங்கேயிருந்த அனைவரையும் மீண்டும் கலகலப்பு தொற்றிக் கொண்டது.
ராகவ் அவள் சொன்னதற்குப் புன்னகைத்தாலும், அவனது முகம் பரிதவிப்பையே காட்டியது. பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துக் கிளம்பினர்.
“விக்ரம்! நான் வைஷாலியை ஹாஸ்ட்டலில் விட்டுட்டு வரேன்” என்றாள் சீமா.
“ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வந்திடுறேன்” என்றவன், “ராகவ்! பைக்ல தானே வந்த?” என்று கேட்டபடி அவனுடன் இணைந்து நடந்தான்.
பைக் நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி, எதிர் வரிசையில் தங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்தில், பெண்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். வைஷாலி நின்றிருந்த இடத்திலிருந்து, இருவரையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. விக்ரம் ஏதோ கேட்க, ராகவ் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அவனது தோளில் தட்டிய விக்ரம், பதிலுக்கு ஏதோ சொல்வதையும் பார்த்தாள்.
ராகவ் சொன்னதை ஆழ்ந்து கேட்டுக்கொண்டவன், “இதை ஆரம்பத்திலேயே என்னிடம் சொல்லியிருக்கலாம்” என்றான்.
“நீங்க எங்க ரெண்டு பேருக்காகவும் எவ்வளவோ செய்திருக்கீங்க… ஆனாலும்  ஜோதி…” என்றவனுக்கு, மேற்கொண்டு பேச சங்கடமாக இருந்தது. “ஒரு கட்டத்துக்கு மேல என்னால் முடியலை சார்… நானும் மனுஷன் தானே…?” என்றவன் வெறுப்புடன் தலையைக் கோதிக்கொண்டான்.
“புரியுது. ஓகே. பிரச்சனைன்னு வந்தாச்சு; சரி பண்ணுவோம்” என்ற விக்ரம் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.
கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும், தங்களைப் பார்ப்பதுமாக நின்றிருந்த வைஷாலியைக் கண்டவன், “உங்களுக்கும் நேரமாகுது. கிளம்புங்க சார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்குப் பின்னால் கிறீச்சிட்டு இரண்டு பைக்குகள் வந்து நிற்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
பைக்கில், பின்னால் அமர்ந்திருந்தவன், “எங்கேடா அவ?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
“அதோ… அங்கே இருக்கா. இன்னும் கொஞ்சம் நேரமாகியிருந்தா, அவ கிளம்பியிருப்பா!” என்றவன், மற்றொருவனின் பைக்கில் பின்னால் அமர்ந்து கொள்ள, அங்கேயிருந்த ஆட்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வேகத்துடன் கிளம்பினர்.
சீமாவிடம் பேசிக்கொண்டே திரும்பிய வைஷாலி, தங்களை நோக்கி வந்த பைக்குகளைப் பார்த்ததும், மனத்தில் இனம்புரியா பயம் தோன்ற, தன்னையும் அறியாமல் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
பைக்கிலிருந்தவன் தன்னை நோக்கிக் கை நீட்டுவது மட்டும் புரிந்தது. ‘வீல்’ என்ற அலறலுடன் கீழே விழுந்தவளுக்கு, தன்னருகில் ஓடிவந்த விக்ரமின் முகம் மங்கலாகத் தெரிய, சிறிது சிறிதாக தனது நினைவை இழந்தாள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...