கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2
கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2
மு.ஞா .செ.இன்பா
அந்தி நேரக் கதிரவன், தன் முகத்தைப் பொன்னில் உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மாமன் வீட்டு சீர் போல…….
குளிர் தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில் தாங்கி இருந்த பனித்துளிகளைப் சீண்டி பன்னீராக தெளித்துக் கொண்டிருக்க . . அரண்மனை போன்று அரங்கமைத்து சாவிரித்தியின் இல்லம் சொர்க்க லோகம் போல காட்சியளித்தது.
பாப்பரப்பு இன்றி காணப்படும் அபிபுல்லா சாலை, இன்று சாவித்திரி இல்ல பரபரப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டிருந்தது.
வீட்டினுள், ஜெமினியின் மனைவிமார்கள் பாப்ஜியும் சாவித்திரியும் வந்தவர்களை வரவேற்று, உபசரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரேயொரு அறை மட்டும் சற்று வித்தியாசப்பட்டு காணப்பட்டது.
திடீர் எனத் கதவு திறக்கப்படுவதும் பொருட்களை சிலர் எடுத்துக் கொண்டுபோவதும், வெளியே வருவதுமாய் இருந்த அந்த அறையில் இருந்து தேவதை போல இளம்பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.
என்ன ஒரு அழகு… அந்த 16வயது மங்கைக்கு !
மிஸ்ஸியம்மா படம் வெளியான காலகட்டங்களில் சாவித்திரி முக அமைப்பு கொண்டு இருந்த தோற்றம்.
நண்பன் கர்ணனுக்காக சுபாங்கினியை பெண் பார்க்கப் துரியோதனன் சென்ற பொழுது, தேவலோகப் பெண் சுபாங்கினி கண்டு வியந்தது போன்று… அந்த பெண்ணின் அழகில் அனைவரும் வியந்து நின்றனர் . .
திரையுலகத்தின் முதன்மைப் பெரியவர்கள் அந்தப் பெண்ணை வாழ்த்தப் போகும் மகிழ்வுக்காகக் வெளியே காத்திருந்தார்கள்.
சிவாஜியும் அவர் மனைவி கமலம்மாவும், அஞ்சலிதேவியும் வந்து விட்டார்கள் என ஒருவர் சொல்லிவிட்டுப் போக,
சாவித்திரியும், பாப்ஜியும் அப் பெண்ணின் அருகில் வந்து, அவளை சிற்பம்போல அழைத்துக்கொண்டு, சிவாஜியிடம் சென்றார்கள்.அந்தப் பெண்ணின் மணக்கோலம் கண்டு, மகள் சாந்தி, தேன்மொழியை இந்தக் கோலத்தில் கண்டது போது,அடைந்த மகிழ்ச்சி சிவாஜிக்கு ! மகிழ்வில் அருகில் வந்த அந்தப் பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார் சிவாஜி.
சாவித்திரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! பாப்ஜியும் தன் கண்ணீரை அடக்க முடியாமல் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டார்.
சிவாஜி முத்தமிட்டு ஆசீர்வதித்த பெண், சாவித்திரியின் 16-வயது நிரம்பிய மகள் சாமுண்டீஸ்வரி, அவரின் முழுப்பெயர் விஜய சாமுண்டீஸ்வரி
என்பதாகும் .இந்த நீண்ட பெயரை தன் மகளுக்கு சூட்ட ,சாவித்திரியின் செய்நன்றி மறவாத குணம் தான் காரணம் . யாராவது சிறிய உதவியை செய்து விட்டால் , அவர்கள் மலைத்துப் போகும் அளவிற்கு பெரிய காரியங்களை செய்து அவர்களை திக்குமுக்காட விடுவார் சாவித்திரி !