கலைவாணர் எனும் மாகலைஞன் – 7 – சோழ. நாகராஜன்
ஜெகந்நாத ஐயர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்தவை இவைதாம். அந்தப் புகாரில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் சட்டப்படி கிருஷ்ணனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது கிருஷ்ணன் இருந்தது டி.கே.எஸ். குழுவினர் முகாமிட்டிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி. சமஸ்தானம் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத நிலை. கிருஷ்ணனோ ஜெகந்நாத ஐயருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதையே மறந்துதான் அங்கிருந்து ஓடி வந்திருந்தார். எனவே, சட்டச் சிக்கல்கள் நிறைய இருந்தன.
கிருஷ்ணனை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்றால் அவர்கள் மதுரைக்குப் போகவேண்டிய நிலை. இந்தச் செய்தி நாகர்கோவில் ஒழுகினசேரியிலிருந்த கிருஷ்ணனின் அப்பா சுடலைமுத்துவின் செவிகளை எட்டியது. அவர் அதிர்ந்துபோனார். மதுரைக்கு விரைந்தார். அவர்தான் முதலில் ஜெகந்நாத ஐயரிடம் தன் மகனுக்காகப் பரிந்து பேசினார். அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட ஐயர், கிருஷ்ணன் தொடர்ந்து தன் கம்பெனியில் நடிப்பதாக வாக்களித்தால் வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளித்தார். அதன்படிதான் தந்தையின் பேச்சுக்கு இணங்கி கிருஷ்ணனும் நடந்துகொண்டு, பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்தது.
இலங்கையின் யாழ் நகரம் அந்த மண்ணில் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. அங்கு அவர்களின் நாடகம் பல நாட்கள் நடந்தது. ஆனால், லாபகரமாக இல்லை. பெரும் நட்டமேற்படவே அக் குழு கலைந்துவிடுமென முன்னுணர்ந்த கிருஷ்ணன் உடனே இச் செய்தியை டி.கே.எஸ். சகோதரர்களுக்குக் கடிதம் எழுதினார். அவர் நினைத்தபடியே அக் குழு கலைந்துவிட்டது. இதைத் தெரிவித்து, தான் கிளம்பிவந்து உங்களுடன் இணைந்துகொள்ள வசதியாகப் பயணத்துக்குப் பணம் அனுப்பும்படியும் தந்தி மூலம் கேட்டிருந்தார்.
பெரியண்ணன் டி.கே. சங்கரன் இதைக் கேள்விப்பட்டதும் பெரிதும் மகிழ்ந்தார். உடனே தந்தி மணியார்டரில் பணம் அனுப்பப்பினார் அவர். மூன்றே நாட்களில் டி.கே.எஸ். குழுவினர் அந்தச் சமயத்தில் முகாமிட்டிருந்த கரூருக்கு வந்துசேர்ந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். எல்லையற்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் குடியேறியிருந்தது.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த அந்தக் கண்டனக் கூட்டம் தடை செய்யப்பட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்தியையும் மீறி தன்னெழுச்சியாக மக்கள் குழுமிவிட்டார்கள். கூட்டத்தில் முத்துச்சாமியும் கிருஷ்ணனும் இருந்தார்கள். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வேங்கடகிருஷ்ண பிள்ளை கைது செய்யப்பட்டார். கூட்டம் மேலும் தொடராமல் நிறுத்தப்பட்டது. திரண்டிருந்த மக்கள் கொந்தளித்தார்கள். பிரிட்டிஷ் போலீசார் கூட்டத்தைக் கலைக்கக் கடுமையான தடியடி நடத்தினார்கள்.
முத்துச்சாமிக்கும் கிருஷ்ணனுக்கும் அடி விழுந்தது.
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |