காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை;
காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!
நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
னவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடியுடன் வெளியில் செல்வதை காண முடிந்தது. தூய காற்றை சுவாசிக்க வழி செய்யும் வகையில் வாடகைக்கு காற்றை விற்கும் கடைகளும் உருவாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தெற்கு டெல்லி, என்.சி.ஆர், நொய்டா, ரிவாரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.
சாப்தர்ஜங்கில் உள்ள வானிலை மையத்தில் பதிவான தகவலின்படி, நேற்று இரவு 8.30 மணி வரை 1.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் தொடர் மழை வெளுத்து வாங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வழிமாற்றம் செய்யப்பட்டன. மழையால் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த மழையால் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு சற்றே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரில் நேற்று அதிகபட்சமாக 21.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 12.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது.
இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 19 டிகிரியும், குறைந்தபட்சமாக 13 டிகிரியும் வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பெய்த கனமழை காரணமாக டெல்லியில் இன்று காற்றின் தரம் சற்றே உயர்ந்து காணப்படும் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி டெல்லி 429, காஸியாபாத் 467, நொய்டா 434, கிரேட்டர் நொய்டா 423, ஃபரிதாபாத் 410, குர்கான் 395 என்ற தரத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று தரவரிசைக் குறியீட்டின் படி 301-400 வரை இருந்தால் “மிக மோசம்” என்றும், 401-500 வரை இருந்தால் “மிக மிக மோசம்” என்றும், 500க்கும் மேல் இருந்தால் “சுவாசிக்க ஆபத்தான சூழல்” இருப்பதாகவும் பொருள்படும்.