திருவண்ணாமலையில் இசைஞானி..!

 திருவண்ணாமலையில் இசைஞானி..!

இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் வரலாறு யாராலும் அழிக்க முடியாதது. தமிழ்நாடு வரைபடத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து கிளம்பிவந்து இன்று உலகம் முழுவதும் தெரியும் ஞானியாக அவர் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் விடுதலையில் வந்து நிற்கிறது. அடுத்ததாக விடுதலை 2 படம் வரவிருக்கிறது. இப்போது உள்ள இயக்குநர்களுடன் இளையராஜா இணைந்து பணியாற்ற மறுக்கிறார் என்ற விமர்சனத்தையும் அவர் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

இளையராஜா தீவிர ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்தது. அதிலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் பக்தர் அவர். அவரது ஆன்மீக ஈடுபாட்டால்தான் அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாமி என்றே அழைப்பார். மேலும் எவ்வாறு இப்படி இசையமைக்கிறீர்கள் என்று கேட்டால், இளையராஜாவின் பதில், ஆண்டவன் அருள் என்பதாகத்தான் இருக்கும். இளையராஜா சில நாட்களுக்கு முன்புதான் தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அன்று அவருடைய பாடல்களை கேட்டு; அவரை கொண்டாடினர். முக்கியமாக ஷோஷியல் மீடியாவில் இளையராஜா பற்றிய தகவல்களும், நினைவுகளும் சிறகடித்தன. இந்நிலையில் அவர் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் அறங்காவலர் குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...