வடக்கன் படத்தின் பெயர் மாற்றம்..!

 வடக்கன் படத்தின் பெயர் மாற்றம்..!

தணிக்கை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வடக்கன் திரைப்படத்தின் பெயரை ரயில் என மாற்றுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி,  இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘வடக்கன்’.  இவர் வெண்ணிலா கபடி குழு,  எம்டன் மகன்,  நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும்,  அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை,  வசனமும் எழுதியுள்ளார்.  வடக்கன் திரைப்படத்தில் குங்குமராஜ்,  வைரமாலா,  பர்வேஸ் மெஹ்ரூ,  சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் லிங்குசாமி வழங்க டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார்.  ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதியுள்ளார்.  இப்படம் வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது.  இந்தநிலையில்,  ‘வடக்கன்’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ஆனாலும் படத்தின் வெளியீடு தாமதமானது.  படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி தணிக்கை அதிகாரி வலியுறுத்தியதால் படத்தின் வெளியீடு தாமதமானதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் வடக்கன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து  டிஸ்கவரி சினிமாஸ் உரிமையாளர் மு.வேடியப்பன் தெரிவித்துள்ளதாவது..

“எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயர்,  தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால்,  தற்போது ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்! உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.” என  மு.வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...