கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!

கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!

    இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் மண்மணம் கமழும். கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பல்வேறு இடங்களிலிருந்தும்  வந்திருந்த ரசிகர்களும் அன்று அவ்வாறே உணர்ந்தார்கள். மேஸ்ட்ரோ இளையராஜாவுடனான தேசிய விருதுபெற்ற இயக்குனர் பால்கியின் கலந்துரையாடல் அரங்கில் இருந்தவர்களைக் காலத்தால் பின்னிழுத்துச் சென்றது. ராஜா வருவதற்கு முன்பு, நிகழ்ச்சிக்காக அவருடைய இசைக்கலைஞர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த புன்னகை மன்னன் பட தீம் இசைக் குறிப்புகூட பார்வையாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. அரங்கில் இளையராஜா உள்ளே நுழைந்தபோது வரவேற்பு விண்ணைப் பிளந்தது. நான் மாஸ்டர் அல்லர், ஆனால் என்னால் வகுப்பு எடுக்கமுடியும் என்றார் ராஜா. நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிமையான மனிதர் இவர் என்று ராஜா பற்றி பால்கி குறிப்பிட்டார்.   

இசையின் தொடக்கம் குறித்த தீவிரமான போக்குடன் பேச்சை ஆரம்பித்தார் ராஜா. “இசை நம்மை மேகங்களுக்கு அப்பால், வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லவேண்டும். அப்படி இல்லையென்றால் அது இசையே அல்ல” என்றபடி, “எங்கே இருந்தாய் இசையே,” என்ற பாடலை இசைத்தார். அதன் வரிகள், இசையமைப்பாளர்களின் ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைகின்றன என்பதைக் கூறுவதாக இருந்தது. பால்கி தனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லையென்றும், ராஜாவின் பாடல்களைக் கேட்டு ரசிப்பதே தனக்குச் சுகம் என்றும் கிண்டலாகக் கூறினார். இதைக் கேட்டு சிரித்த இளையராஜா, மற்றுமொரு பாடலுக்குப் பிறகு, “எனக்கு இசை தெரிந்தோ தெரியாமலோ இருக்கலாம், ஆனால் இசைக்கு என்னைத் தெரியும். அதனால் தான் இப்படிப்பட்ட பாடல்கள் எனக்கு அமைகின்றன” என்றார்.

இளையராஜாவை பால்கி, மேடையிலேயே ஒரு பாட்டிற்கு  இசையமைக்க வைத்ததே அன்றைய மாலையின் சிறந்த தருணங்கள். “தன் தந்தையைக் கொல்வதற்காக சென்று கொண்டிருக்கும் மகன்…” என்று தொடங்கி பாடலுக்கான சூழலை விளக்கினார் பால்கி. ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தபின், பார்வையாளர்களிடம் அமைதி காக்க உறுதி வாங்கிக்கொண்டு, பாடலுக்கான நோட்ஸை எழுத ஆரம்பித்தார் ராஜா. அவர்களும் சொன்னபடியே அமைதி காத்தார்கள், அவ்வப்போது இருமல்களால் அந்த அமைதியை உடைத்தபடியே. “இந்தப் பாடலுக்கு இசையமைக்க, பெரும்பாலானவர்கள் இரண்டு நாள்களாவது எடுத்துக் கொள்வார்கள்,” என்றார் பால்கி. சில நிமிடங்களில் பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதி முடித்த ராஜா, இசைக்குறிப்புகள் அடங்கிய தாளை வயலின் கலைஞரிடம் வழங்கினார். “இப்போதெல்லாம் இதைப்போல ஒரு பாடலுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்” என்று அவர் சொல்ல, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்தப் பாடலுக்கு இசையமைக்க, புல்லாங்குழல் வாசிப்பவர் உள்பட அனைத்து இசைக்கலைஞர்களின் பங்கிருந்தது. இரண்டு நிமிடங்களில் பிறந்த பாடல் போலத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட தாலாட்டு போலிருந்தது. அதைப்பற்றிக் அவரிடம் கேட்க, “நான் ஏன் இதைத் தாலாட்டைப் போல இசையமைத்தேன் என்றால், சாகப்போகும் ஒரு தந்தையைப் பற்றியது இது. கண்டிப்பாக தன்னைக் கொல்ல வரும் தன் மகனுக்கு முன்னொரு காலத்தில் அவர் தாலாட்டு பாடியிருப்பார்” என்று அனைவரும் பிரமிக்கும் வகையில் விளக்கமளித்தார் ராஜா.

‘தென்றல் வந்து’ மற்றும் ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின. ரசிகர்களோடு சேர்ந்து இளையராஜாவும் பாடிக்கொண்டே வந்தார், தாளம் தப்பியபோது செல்லமாய் கடிந்துகொண்டார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்ள, இளையராஜாவுக்கு இந்த அனுபவம் சந்தோஷப்படுத்தியது. அவர் பாடல்களை முடித்துக்கொண்டு கிளம்பும் வேளையிலும்,  திரும்பவந்து ‘இளமை எனும் பூங்காற்று’, ‘இளைய நிலா’, மற்றும் ‘என் இனிய பொன் நிலாவே’ போன்ற பாடல்களின் மெட்லியை (பாடல் தொகுப்பு) இசைத்தார். ரசிகர்களின் உற்சாகமான கரகோஷத்துக்கிடையே, மிகுந்த மகிழ்ச்சியுடன் அரங்கை விட்டு வெளியேறினார். அன்று, எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்களைத் தந்துவிட்டுச் சென்றதை அநேகமாக அவர் அறிந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!