டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!

டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தியது இந்தியா!

     பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வென்று 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய ஓசேனியா மண்டலம் 1 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இஸ்லாமாபாதில் செப்டம்பா் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட முடியாது என இந்திய முன்னணி வீரா்கள் மறுத்து விட்டனா். இதனால் நடுநிலையான இடத்துக்கு போட்டியை மாற்ற ஏஐடிஏ கோரியது. இதற்கு பிடிஎப் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், டேவிஸ் கோப்பை கமிட்டி, நிலைமையை ஆய்வு செய்து, கஜகஸ்தான் தலைநகா் நுா்சுல்தானுக்கு போட்டியை மாற்றி நவ. 29, 30 தேதிகளில் நடைபெறும் என அறிவித்தது. கடும் குளிா் நிலவுவதால், உள்ளரங்க மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் முன்னணி வீரா்கள் போட்டியை இடம் மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கலந்து கொள்ளவில்லை.

    வெள்ளிக்கிழமை ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரா் ராம்குமாா் ராமநாதன் 6-0, 6-0 என்ற நோ் செட்களில் பாக்.கின் முகமது ஷோயிப்பை 42 நிமிடங்களில் வீழ்த்தினாா். அதன்பின் இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் முன்னணி வீரா் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நோ் செட்களில் ஹுசைபா அப்துல் ரஹ்மானை சாய்த்தாா். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. 

    இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டா் பயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் முகமது சோயிப் – ஹுஃபைஸா அப்துல் ரெஹ்மானை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டம் 53 நிமிடங்களில் முடிந்தது. இது, டேவிஸ் கோப்பைப் போட்டியில் லியாண்டர் பயஸ் பெறும் 44-வது இரட்டையர் ஆட்ட வெற்றியாகும். 

    இன்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் யோசஃப் காலிலைத் தோற்கடித்தார். இதன்மூலம் இந்திய அணி, 4-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து 5-வது ஆட்டம் கைவிடப்பட்டது.

   இந்தப் போட்டியில் வென்றுள்ள இந்திய அணி 2020 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகப் பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, மார்ச் 6-7 தேதிகளில் குரோஸியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!