நெ.து. சுந்தரவடிவேலு
நெ.து. சுந்தரவடிவேலு
கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில் எத்தனையோ கல்வியாளர்கள், கல்வித் தந்தையர், அறச் சிந்தனையாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் கல்வித்துறையில் நிர்வாகப் பதவிக்கு வந்து செயற்கரிய பல செய்து அனைவர் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்றவர் ஒருவர் என்றால் அது நெ.து.சு. என்று அன்போடு அழைக்கப்படும் நெ.து. சுந்தரவடிவேலுதான்.
1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த “மெட்றாஸ் ஸ்டேட்’டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர்ந்தார் நெ.து.சு. 1954இல் பொதுக்கல்வி துணை இயக்குநராக நெ.து.சு. இருந்தபோது “குலக்கல்வி திட்டம்’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட – முற்பகலில் படிப்பு, பிற்பகலில் தந்தைக்கு உதவியாக வீட்டில் வேலை செய்தல் – என்பதை நெ.து.சு. முதலில் எதிர்த்தார். முதல்வர் ராஜாஜி அத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக ஆம்பூரில் நெ.து.சுவைப் பேச வைத்தார் ராஜாஜி. அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கவே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் ராஜாஜி.
காமராஜர் முதல்வரானார். பொதுக்கல்வி இயக்குநர் பதவி காலியானபோது நெ.து.சுவை இயக்குநராக நியமித்தார் காமராஜர். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை நெ.து.சு. ஆதரித்துப் பேசியதை சிலர் சுட்டிக்காட்டினர்.
“”ஒரு திட்டம் வருவதற்கு முன்னால் அரசுக்கு அதிகாரியால் ஆலோசனைதான் கூற முடியும். அந்த திட்டம் அமலுக்கு வந்தபிறகு அதை நிறைவேற்றுவதுதான் அவரது கடமை. எனவே அவரது செயலில் தவறு ஏதும் இல்லை” என்று காமராஜர் பதில் அளித்தார். இப்பதவி ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதில் அமர்ந்த முதல் தமிழர் நெ.து.சு.தான்.
அவருடைய பதவிக்காலத்தில்தான் 1955-இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 1958இல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 1961இல் கல்லூரிக் கல்வி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிடச் செய்தார்.
கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடையின்போது முதல் படியை சாமிக்கும் இரண்டாவது படியை ஊர்த் தொழிலாளர்களுக்கும் ஒதுக்குவதைப்போல பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்துக்காக மூன்றாவது படியையும் ஒதுக்கக் கோரி அதில் வெற்றியும் பெற்றார்.
1969-ல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரானார். அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் அனுமதியுடன் புகுமுக வகுப்பில் இலவசக் கல்வியைக் கொண்டுவந்தார். உயர் கல்விக்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் அதிக இடங்களை ஒதுக்கினார்.
சென்னையிலேயே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்துவதால் தொலைதூரங்களிலிருந்து வருவதில் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து அந்தந்தக் கல்லூரிகளிலேயே பட்டங்களை வழங்கிக் கொள்ளலாம் என்று விதியை மாற்றினார்.
பல்கலைக்கழகங்களில் பூட்டிவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறந்தனவற்றை நூல்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
புகுமுக வகுப்பிலும் பட்டப்படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தார்.
1972-இல் மீண்டும் துணை வேந்தரானார். தன் வாழ்நாள் முழுவதும் கல்வி தொடர்பான பணிகளில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டவர் நெ.து.
1 Comment
“மூதறிஞர்,பெருந்தலைவர்களுடான,ஐயா நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஆற்றிய கல்விப்பணி குறித்த அரிய அற்புதத் தகவல்கள்.