ஸ்ரீரமண மகரிஷி

❤

 மறைந்த நாளின்று

ஸ்ரீரமண மகரிஷி❤ மறைந்த நாளின்று!🐾🐾

🌺இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.’

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

‘ இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.’ வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

‘ அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.’ இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, ‘நான்’ என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

‘ நான்’ என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

‘ என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு’ ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

‘ உள்ளே இருப்பது நான். அதுதான் நான்’ ஒருபடி இறங்கினான்.

‘ இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல’ ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

‘உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. ‘நான்’ என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்’ பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

‘ இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா’

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். அப்பேர்ப்பட்ட மகான் மறைந்த நாளின்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!