குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று
கம்யூனிசம் பேசிய காவித் துறவி! குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாளின்று
“தாழ்த்தப்பட்ட மக்களை ஆலத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றிய சாதிய கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத்தவரையும் அர்ச்சகராக முயன்றது உள்ளிட்ட செயல்களுக்காக குன்றக்குடி அடிகளார் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார்”
பெரியாரின் கடவுள் மறுப்பு கருத்துக்ளோடு முரண்பாடுகள் கொண்டாலும் சாதி ஒழிப்பு பணிகளில் பெரியார் உடன் இணைந்து பணியாற்றிய ஆன்மீக பெரியவர்களில் முக்கியமானவராக குன்றக்குடி அடிகளார் உள்ளார்.
*தமிழில் அர்ச்சனை செய்வதை தொடங்கி வைத்தவர்*
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடக்கப்பட்ட தமிழ்நாடு தெய்வீக பேரவையின் தலைவராக இருந்த அடிகளார் கோயில்களில் தமிழில் அர்ச்சனையை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தவச்சலம் முன்னிலையில் திருமறை தமிழ் அர்ச்சனையை தொடங்கி வைத்தார்.
*மொழிப்போராட்டம்*
1965ஆம் ஆண்டில் மொழி போராட்டம் நடந்தபோது குன்றக்குடியில் அடிகளார் தலைமையில் அமைதிகாக்கும் ஊர்வலம் நடந்தது. தமிழ் வாழ்க என்பது மட்டுமே இந்த ஊர்வலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனாலும் அரசியல் காரணங்களால் குன்றக்குடி அடிகளார் கைது செய்யப்பட்டு அவருக்கு 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் பக்தவச்சலம் வழக்கை திரும்பப் பெற்றார். அடிகளார் அபராதத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தார்.
அடுத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா, அடிகளார் மீதான வழக்கு நடவடிக்கைகளை முழுமையாகத் திரும்பப் பெற்றதோடு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையையும் திருப்பிக் கொடுக்க ஆணை பிறப்பித்தார்.
*சட்டமேலவை உறுப்பினர்*
திருநீறு அணிந்தபடியே பெரியாரின் பகுத்தறிவு கூட்டங்களிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தினர் நடத்திய நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் 1969ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினர் ஆனார்.
*அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாடுபட்டவர்*
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகை செய்யும் மசோதாவை அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்தபோது காஞ்சி காமகோடி பீடம் தரப்பில் இருந்து அந்த மசோதாவை எதிர்க்க கோரிக்கை வந்தப்போதிலும் அதற்கு அதற்கு இசைவு தெரிவிக்காமல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
*மண்டைக்காடு கலவரத்தில் அமைதியை ஏற்படுத்தியவர்*
1982ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் நடந்த மதக்கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி திரும்பும் நடவடிக்கைகளில் அடிகளார் ஈடுபட்டார்.
*பெரியாருக்கு எதிர்வினை*
கடவுள் மறுப்பு கொள்கையை பரப்ப மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்த நிலையில் சைவத்தில் சாதி ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை என்பதை விளக்கி மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடிகளார் சுற்றுப்பயணம் செய்தார்.
பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டங்களுக்கு எதிர்வினையாக அருள்நெறி திருக்கூட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
*மறைவு*
ஆன்மீக பணி என்பது ஆண்டவனுக்கு செய்யும் பணி மட்டும் அல்ல அது மானுட மேன்மையை நோக்கி இருக்க வேண்டும் என்ற நோக்குடன் வாழ்ந்த அடிகளார் 1995ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15ஆம் தேதி மறைந்தார்.