மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து..!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, கடந்த பல நாட்களாக, கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வந்தது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது, கோடை மழையின் தாக்கமாக மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி சுற்றுப்பகுதியில் மழை காரணமாக வெட்பம் தணிந்து குளுமை நிலவியது. மேலும், ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால், அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொடர் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே அதிகளவில் வருகை தருகின்றனர்.