கலைவாணர் எனும் மா கலைஞன் – 5 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன்
5) அந்நாளின் சகலகலாவல்லவன்…
அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக் குறிப்பிடுகையில் நாடகக் குழுவினர் இருட்டு ராஜா என்றே குறிப்பிட்டார்கள். குழுவின் மூத்தவரான டி.கே. சங்கரன்தான் கிருஷ்ணனின் பயிற்சியாளர்.
“என்ன ஆச்சரியம் இது – ஆகா
என்ன ஆச்சரியம் இது…”
– என்று இருட்டு ராஜா பாடவேண்டியது. அந்த வேடத்தை ஏற்று நடித்த கிருஷ்ணன் அந்தப் பாடலைப் பாடினார். இதில் ஆகா என்கிற இடித்தில் கிருஷ்ணனுக்கும் தாளத்துக்கும் பகை முளைத்துவிட்டது. அவர் ஒருபுறம் பாட, தாளம் கோபித்துக்கொண்டு வேறுபுறமாகப் போய்க்கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சங்கரன் பலமுறை சொல்லிக்கொடுத்தும் குரல் தாளத்தோடு இயைந்து செல்ல மறுத்தபடியிருந்தது.
சங்கரனுக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததென்று தெரியவில்லை. அப்படியொரு கோபத்தோடு கிருஷ்ணனின் கால் தொடையை நறுக்கென்று அழுத்திக் கிள்ளிவிட்டார். கிருஷ்ணனுக்கு வலி பொறுக்க முடியாமல் அழுகையே வந்துவிட்டது. அப்போதும் பாட்டை நிறுத்தவில்லை. பாடுவதைக் கைவிடவில்லை. அவர் அழுதுகொண்டே பாடினார். அவருக்குத் தெரியும் நாடகக் குழுக்களில் பாடிக்கொண்டிருந்தால் அழுகை வந்தாலும் பாடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று. காரணம், பாடுவதை நிறுத்தினால் இன்னும் கொஞ்சம் உதை விழும்.
கிருஷ்ணன் கிள்ளு வாங்கி, பாடலை அழுதுகொண்டே பாடுவதைக் கண்டதும் சக நாடகக் கலைஞர்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். கிருஷ்ணன் இப்படிக் கேட்டார்:
ஏம்பா சிரிக்கிறீர்கள்? நம்ம அண்ணாச்சிதானே கிள்ளினாரு? பரவாயில்லை. அந்தப் பாடலை சங்கரதாஸ் சுவாமிகளிடம் நம்ம அண்ணாச்சி கற்றுக்கொள்ளவேண்டி அவரும் அடி வாங்கியிருப்பார். நானும் எதிர்காலத்தில எத்தனையோ பேரை இப்படித்தான் அடிக்கப் போறேன். இதுதானே நமது பரம்பரை? இதைப் புரிஞ்சுக்காம இப்படிச் சிரிக்கிறீங்களே… என்றார். ஆசானின் தண்டனையைக்கூட கற்றுக்கொள்ளும் முறைமைகளில் ஒன்றெனவே கருதிய அவரது இந்தப் பக்குவமும் அல்லவா கிருஷ்ணனை மிக உயரத்தில் உயர்த்தியிருக்கிறது.
இதுபோலத்தான் இன்னொரு சம்பவம். மனோகரா என்ற நாடகத்தில் அந்தக் குழுவின் தலைமை நகைச்சுவைக் கலைஞர் எம்.ஆர்.சாமிநாதனிடம் அமிர்தகேசரி என்ற வைத்தியர் வேடம் தரித்த கிருஷ்ணன் அடிவாங்குவார். புதியவர் என்றாலும் திறமையாக நடித்து ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்த கிருஷ்ணனை சாமிநாதன் அடித்ததை ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஆத்திரமடைந்த ரசிகர்கள் எழுந்து நின்று கூச்சல் போட்டார்கள். கத்தினார்கள். தொடர்ந்து நாடகத்தை நடத்த விடவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணன் தன் ரசிகர்களின் முன்னால் மேடையில் நின்றுகொண்டு தனக்கும் சாமிநாதனுக்கும் பகையேதும் இல்லை எனவும், தானும் அவரும் நல்ல நண்பர்கள் என்றும், கதைப்படியே அவர் தன்னை அடித்ததாகவும், அந்த அடியும் வெறும் நடிப்புதான் என்றும் விளக்கம் தர நேர்ந்தது. அப்புறம்தான் ரசிகர்கள் அமைதியானார்கள், மனோகரா நாடகம் தொடர முடிந்தது.
கிருஷ்ணனிடம் நகைச்சுவை உணர்வு மேலொங்கியிருந்ததை டி.கே. சண்முகம் உணர்ந்திருந்தார். அதனால், அக்குழுவின் பிரதான நகைச்சுவை நடிகர் எம்.ஆர். சாமிநாதனின் வசனங்களையெல்லாம் ஓய்வு நேரங்களில் மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ளும்படி கிருஷ்ணனிடம் சண்முகம் கூறுவது வழக்கம். டி.கே.எஸ். குழுவினர் காரைக்குடியில் முகாமிட்டு மனோகரா நாடகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். நாடகக் கலைஞர்கள் அந்நாளிலெல்லாம் எந்தக் குழுவிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். அப்படித்தான் இதுவும் நடந்தது. சாமிநாதனும் அவரது தங்கை மீனாட்சியும்
சொல்லிக்கொள்ளாமல் அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்டனர். சாமிநாதனின் வசனங்களை ஏற்கெனவே கிருஷ்ணன் மனப்பாடம் செய்து வைத்திருந்ததால் சாமிநாதனின் வேடமான வசந்தன் பாத்திரம் கிருஷ்ணனுக்கே சுலபமாகக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டி.கே.எஸ். நாடகக் குழு அரங்கேற்றிய எல்லா நாடகங்களிலும் சாமிநாதனின் வேடங்களைக் கிருஷ்ணனே பெற்றார். சாமிநாதனும் குறை சொல்லமுடியாத கலைஞர்தான் என்பதால் கிருஷ்ணனுக்குத் தன்னை இன்னும் அழுத்தமாக நிரூபிக்க பெருமுயற்சியெடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
கிருஷ்ணனுக்கு நடிப்போடு வேறு கலைகளிலும் பயிற்சி இருந்தது. மிகவும் நன்றாப் பாடினார். ஆர்மோனியம், மிருதங்கம், கஞ்சிரா போன்ற கருவிகளை மிகநன்றாக வாசிக்கப் பழகியிருந்தார். பரதத்தின் சொற்கட்டுக்களைச் சொல்வார். மிக நேர்த்தியாக நாடகக் காட்சிகளுக்குப் படுதாக்களில் படங்களை வரைவார். அவர்களின் குழுவில் படுதாக்களை வரைவதில் திறன் வாய்ந்த மாதவன் என்பவர் இருந்தார். இராமதாஸ் எனும் நாடகத்தை அரங்கேற்ற இருந்த சமயத்தில் மாதவன் அக்குழுவிலிருந்து விலகிப் போய்விட்டார். அந்த வாய்ப்பு கிருஷ்ணனுக்குக் கிடைத்தது.
இராமதாஸ் நாடகக் காட்சிகளின் திரைச்சீலை ஓவியங்களை அழகுற வரைந்து பலரது பாரட்டுதல்களையும் பெற்றார் கிருஷ்ணன். அதுபோலத்தான் ஆர்மோனியக்காரர் விலகியபோது கிருஷ்ணனே ஆர்மோனியம் வாசித்து நாடகத்துக்கு உதவுவார். அதேபோல, மிருதங்க வித்வானுக்கு உடல் நலமில்லையெனில் கிருஷ்ணனே மிருதங்கக் கலைஞனாக மாறிவிடுவார்.
கிடைக்கிற சந்தர்ப்பம் ஒவ்வொன்றையும் தனக்கானதொரு அரிய வாய்ப்பாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, தானொரு சகலகலா வல்லவன் என்பதைத் தன்னுடைய நுட்பமான பல கலைத் திறன்களால் நிறுவினார் கலைவாணர் என்ற அந்த மா கலைஞர்… அதுவும் தன்னுடைய கலை வாழ்க்கையின் துவக்க காலத்திலேயே.
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |