டி. கே. பட்டம்மாள்
பட்டம்மாள் பர்த் டே டுடே
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்©.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும்மூர்த்திகள்’ என நிலை நாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.
அலமேலு என்ற இயற்பெயருடைய பட்டா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் பட்டம்மாள் காஞ்சிபுரத்தில் 1919-ஆம் வருடம் ஓர் ஏழ்மையான பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் பிராமணர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களாக இருந்தாலும், பல பிராமண ஆண்கள் கர்நாடக சங்கீதத்தில் ஜாம்பவான்களாக விளங்கினாலும், பிராமணப் பெண்கள் பாடுவது பெரும் அநாச்சாரமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அக்காலப் பெண் பாடகர்களாக இருந்தவர்கள் அனைவருமே தேவதாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே பாடகிகள் அனைவருமே சமூகத்தால் தேவதாசிகளாகப் பார்க்கப்பட்டார்கள். விளைவு, பிற ஜாதிப் பெண்கள் பாடுவதை அக்குடும்பத்து ஆண்கள் தடை செய்தார்கள்.
இயற்கையிலேயே சிறந்த குரல்வளம் பட்டம்மாளுக்கு இருந்தது. ஒரு குடும்ப நிகழ்ச்சியில் சிறுமி பட்டம்மாளின் குரலைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட ஒரு குரலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காமல் தாமாகவே சங்கீதம் கற்றுக்கொடுக்க முன்வந்தார் ‘தெலுங்கு வாத்தியார்’ என்றொருவர். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு இசைச்சூழல் நிலவியது. காஞ்சிபுரம் நாயனா பிள்ளை தமிழகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர். அவருடைய கச்சேரிகளை நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பும் பட்டம்மாளுக்கு நிறையவே கிட்டியது. நாயனா பிள்ளையிடம் நேரடியாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய கச்சேரிகள் பட்டம்மாளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தன; அவருடைய கற்பனைத்திறனையும், படைப்பூக்கத்தையும் வளப்படுத்தின.
பள்ளியில் நடந்ததொரு விழாவில் பட்டம்மாள் பாடியது பலர் கவனத்தையும் கவர்ந்தது. பள்ளித் தலைமையாசிரியை அம்முக்குட்டி அம்மா பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப் படுத்தினார். பள்ளி விழா செய்தித்தாளில் பட்டம்மாளின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டது. இக்காலப் பெற்றோர்கள் தொலைக்காட்சிகள் நடத்தும் இசைப்போட்டிகளில் தம் குழந்தைகளோடு அமர்ந்து ரசிக்கிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; விம்மிப் புடைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து எழுதப்படும் கட்டுரைகளில் பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் செய்திக்குறிப்பைப் படித்து ஆனந்தக் குதூகலித்தார் என்று எழுதும் அளவுக்கு நம் சமூகப்பார்வை முன்னேறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதருக்குக் கடுங்கோபம் வந்தது. பாட்டு, நடனம் இதற்காகவெல்லாம் பரிசு வாங்குவதோ, பிரபலமடைவதோ குடும்பப்பெண்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை. இதற்கும் மேலாக கொலம்பியா கம்பெனி பட்டம்மாளின் பாடலை இசைத்தட்டில் வெளியிட வேண்டுமென்று தீட்சிதரை அணுகியது. செய்திக்குறிப்புக்கே கொதித்தவருக்கு இசைத்தட்டு பெரிய கலாசார அதிர்ச்சியைத் தந்தது.
அதுவும் அப்போதுதான் HMV, கொலம்பியா என்ற இரண்டு பெரிய இசைத்தட்டுக் கம்பெனிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுப் பல இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தன. புதிய, புதிய பாடகிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தன. இசைத்தட்டுகளை வரவேற்பதைக் குறித்து ஜாதி பாகுபாடு இல்லாமல் பலரிடமும் தயக்கம் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையைப் போலவே இசைத்தட்டுகள் குறித்தும் அச்சம் நிலவியது. கொள்கை ரீதியாகவும் பல பெரிய இசைக்கலைஞர்களுக்கு இசையைப் பதிவு செய்வது ஒப்புதலாக இருக்கவில்லை. ஆனால் இசைத்தட்டுகள் புதிய இசைக்கலைஞர்களுக்குப் பெரும் விளம்பரத்தையும், கவனிப்பையும் பெற்றுத் தந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தமிழக இசைச்சூழலில் இசைத்தட்டுக் கம்பெனிகள் பெரும்பங்கு வகித்தன.
இப்படிப்பட்ட சூழலில் தீட்சிதரை சம்மதிக்க வைக்க அம்முக்குட்டி அம்மாளும், தீட்சிதரின் நண்பர் Dr.ஸ்ரீனிவாஸன் என்ற காங்கிரஸ் தலைவரும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். பாடகிகளை தேவதாசிகளாகப் பார்க்கும் சமூகத்தில் தன் பெண்ணுக்கு எப்படித் திருமணம் செய்வது என்பது எந்த ஒரு தகப்பனுக்கும் இருக்கும் நியாயமான கவலைதான் தீட்சிதருக்கு இருந்தது. அப்போதுதான் Dr.ஸ்ரீனிவாஸன் ஒரு வாக்குறுதியைத் தந்தார். ஸ்ரீனிவாஸனின் வீட்டிலேயே தங்கி மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் என்ற தன்னுடைய அக்கா மகனையே பட்டம்மாளுக்கு மணம் முடிப்பதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாஸன். இந்த வாக்குறுதி தீட்சிதருக்கு பெரும் பலத்தை அளித்தது. இத்தனைக்கும் Dr.ஸ்ரீனிவாஸனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். வீட்டிலிருக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையை சங்கீதத்துக்காக விட்டுக்கொடுத்து பட்டம்மாளின் இசை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்ரீனிவாஸன். இந்த ஸ்ரீனிவாஸன் காஞ்சி நகர முனிசிபல் சேர்மனாகப் பதவி வகித்தவர். பெரும் காந்தியவாதி. மருத்துவர். காஞ்சி நகர மக்களின் பெருமதிப்பைப் பெற்றவர். (இந்த ஸ்ரீனிவாஸனைத்தான் ஒரு தேர்தலில் முதல்முறையாக வெற்றிகொண்டு அண்ணாதுரை தன் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தார்.)
அம்முக்குட்டி அம்மாள், ஸ்ரீனிவாஸன் ஆகியோரின் பெருமுயற்சியால் மனம் மாறி கொலம்பியா கம்பெனியின் வேண்டுகோளுக்கிணங்கி இசைத்தட்டு வெளியிட சம்மதித்தார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அந்த இசைத்தட்டின் பெரும்வெற்றி பலர் கவனத்தையும் பட்டமாள் பக்கம் திருப்பியது. தமிழின் முதல் பெண் நாவலாசிரியரும், பெண்கள் சுதந்திரத்தையும் வலியுறுத்துபவராகவும் இருந்த வை.மு.கோதைநாயகி அம்மாள், சென்னையிலிருந்து தொடர்ந்து காஞ்சிபுரத்துக்குப் பயணங்கள் மேற்கொண்டு தீட்சிதரிடம் தொடர்ந்து பேசி வலியுறுத்தி பட்டம்மாளைக் கச்சேரிகள் செய்ய வைத்தார்.
இந்த ஒரு மாற்றத்துக்குப் பின் தீட்சிதர் தாமாகவே முன்வந்து பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதுவரை தெலுங்கு வாத்தியார் சொல்லித்தந்த சில கீர்த்தனைகள் தவிர வேறு முறையான இசைப்பயிற்சியைப் பட்டம்மாள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்தது இயற்கையான குரல்வளம், நாயனா பிள்ளை கச்சேரிகள் தந்த உத்வேகம் இவைதான்.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான சமுதாய மாற்றம் தமிழகத்தில் ஏற்படுகிறது. அது ‘தேவதாசி ஒழிப்பு இயக்கம்’ கொண்டுவந்த தேவதாசிகளைக் குறித்த விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வால் ‘பொட்டுக்கட்டி விடுதல்’ என்ற தீமை அழிந்தாலும், ஏற்கனவே தேவதாசி வம்சத்தில் பிறந்து, கோயிலைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அவர்கள் சமுதாயத்தால் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளிர்களாகப் பார்க்கப்பட்டார்கள். கோயில்கள் சார்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன; பொருளாதார ரீதியான பாதுகாப்பு கைநழுவிப் போனது. தேவதாசிப் பெண்கள் திருமண பந்தத்துக்குள் வலுக்கட்டாயமாக இறங்க நேரிட்டது. அழகான, கலைகளில் மேதைகளாக விளங்கிய பெண்களுக்கு மட்டுமே திருமண பந்தம் கிட்டியது. பிற தேவதாசிப் பெண்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். வாழ்வாதாரமே பிரச்சினைக்குள்ளான போது அவர்கள் கலைகளில் லயிப்போடு ஈடுபடுவது இயலாமல் போனது. ஆகப்பெரும் இசை, நாட்டிய மேதைகளின் கலைப்பாரம்பரியம் அறுந்து போனது.
மேதைகள் மட்டுமே சூழலை உருவாக்க முடியாது, எந்தச் சூழலுக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் கூட்டு உழைப்பும், உரையாடல்களும், பங்கெடுப்பும், இயக்கப் பரிமாற்றமும் அவசியம் என்பது சூழல் இயல்பு பற்றிய அடிப்படை அறிவு. அந்தப் புரிதல் அங்கில்லை. அன்றுதான் இல்லை எனச் சொல்ல முடியாது, இன்றும் அது இல்லை. வெற்றி மட்டுமே வசீகரமாகத் தெரிந்த பண்பாடு வேரூன்றி இருந்தது. அதுவே இன்றும் தொடர்கிறது.
இப்படிப்பட்ட சூழலிலதான், பட்டம்மாளின் வரவு கலைக்கான புதியதொரு திறப்பை அளித்தது. தேவதாசிகள் மட்டுமல்லாமல் பிற பெண்களும் குடும்பவாழ்க்கைக்குள் இருந்து கொண்டே கலைத்துறையில் வெற்றிகரமாக ஈடுபடலாம் எனச் சமகாலத்தில் பல பெண்கள்-நாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல், பாகவதத்தில் C.சரஸ்வதிபாய், கர்நாடக சங்கீதத்தில் டி.கே.பட்டம்மாள்-போன்றோர் நிரூபித்தனர்.
பாரம்பரியம் சார்ந்த மனத்தடையையும், பழமைவாதத்தையும் மீறுவதில் அக்காலகட்டத்தில் தீவிரமாக நிலவிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளில் பற்று கொண்டவர்; தீவிர காங்கிரஸ் அபிமானி. பட்டம்மாள் பள்ளி நாட்களில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் இறைவணக்கம் பாடியிருக்கிறார். அவ்வளவு கட்டுப்பெட்டியான நாட்களில் கூட பொதுக்கூட்டங்களில் எப்படி பட்டம்மாளால் பாடமுடிந்தது என்று கேட்டதற்கு “தேசபக்திக்கு முன்னால் வேறெதுவுமே தூசுதான். அதனால் தேசபக்திக் கூட்டங்களில் பாடுவதற்கு என் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்று சொல்கிறார் பட்டம்மாள். தேசத்துக்காக எந்த சமுதாய வழக்கத்தையும் மீறலாம் என்று நினைத்துப் பல சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் தன் மகள் பட்டம்மாளை இறை வணக்கம் பாட வைத்திருக்கிறார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அதைப் போலவே பட்டம்மாள் ஒரு பாடகராகப் பரிமளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸனும் காங்கிரஸ் உறுப்பினர்தான்.
இக்காரணங்களாலோ என்னவோ பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வாங்க அறவே மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். தான் இறுதியாக அளித்த பேட்டியில் கூட இந்தியாவைப் பற்றிப் பேசும்போது அவரால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. பாரதியார் பாடல்களில் பெரிய அத்தாரிட்டியாகவே கடைசிவரை விளங்கினார் பட்டம்மாள். பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே,’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,’வெற்றி எட்டுத்திக்கும்,’ ‘விடுதலை, விடுதலை, விடுதலை,’ போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் பட்டம்மாளுக்கும் முக்கிய பங்கு உண்டு.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ‘அகிகோ’வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
பெற்ற விருதுகள்
* சங்கீத நாடக அகாடெமி விருது, 1962[5] * பத்மபூசன், 1971 * இசைப்பேரறிஞர் விருது, 1973 * சங்கீத கலாசிகாமணி விருது, 1978, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி * பத்மவிபூசன், 1998 * தேசியகுயில் * சங்கீத கலாநிதி * கலைமாமணி விருது