பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள்
பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள்
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்றான். அதுவும் இந்தநாளில்தான். அதுமட்டுமல்லாமல் முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்
. தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
. அதுமட்டுமல்லாமல் அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். பெண்களுக்கு திருமணம் வரம் தரும் விரதம் பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று திருமணமாகாத பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.
அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் கன்னியர்கள் செல்ல வேண்டிய ஆலயம் திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.
இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. மார்ச் 24ம் தேதி காலை 08.47 மணிக்கே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விட்டாலும், காலை 11.17 மணிக்குதான் பெளர்ணமி திதி துவங்குகிறது. ஆனால் மார்ச் 25 ம் தேதி தான் சூரிய உதய சமயத்தில் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து உள்ளன.
இதனால் மார்ச் 25 ம் தேதியையே பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும்.