“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 26ல் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில், விருத்தாச்சலம் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

அவரது பூர்வீகம் திருவாரூர் என்பதால், திரு.வி.க. என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப்படலானார்.

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றித் தொடர்பு வைத்திருந்தார்.

சர்.பிட்டி.தியாகராயர், திரு.வி.க.விடம் பெருமதிப்பு வைத்திருந்தார்.

இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது, பத்தியம் இல்லாமல் போனதால், பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாக, அதைச் சரி செய்தவர் அயோத்திதாசப் பண்டிதர் என்பதை மிகுந்த நன்றியுடன் தனது, “வாழ்க்கைக் குறிப்புகள்” நூலில் பதிவு செய்துள்ளார்.

காந்தியார் சென்னைக்கு முதன்முதலாய் வந்தபோது,அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து, அழகு தமிழில் விளக்கமளித்து, காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.

1921ல் “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ” என்ற நூலினை எழுதினார்.காந்தியத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த உண்மையான காந்தியர்.

சமயம், அரசியல், இலக்கியம், கவிதைகள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத்துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56.

தமிழக வரலாற்றில், அரிய செய்திகள், சிந்தனைகள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பலராவார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி அரசியல், வரலாறு பற்றி அறிந்திட அவரது நூல்கள் பெரும் உதவியாக உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி, அதைத் தன் வாழ்நாளில் செயல்படுத்தி வெற்றி கண்ட தமிழறிஞர். பல்வேறு தமிழறிஞர்களின் வழிகாட்டியாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் விளங்கியவர்.

மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு, ஆற்றொழுக்கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தினார்.

ஒரு மணி நேரம் பேசினால், அதில் கடைசி பத்து நிமிடம், இதுவரை தான் பேசியது என்ன என்பதைச் சுருக்கமாய்ப் பேசி முடிப்பார். கடைசிப் பகுதியையாவது கேட்டு விட வேண்டும் என்ற துடிப்பில் பலர் கூடிக் கேட்பது, அவரின் உரைக்குக் கிடைத்த கூடுதல் சிறப்பு.

திரு.வி.க.வின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர்.

இன்றும் அவரின் எழுத்து நடையைப் போல் பலர் எழுத முற்பட்டாலும், அவரது நடை போல் வருவதில்லை.

தற்போது அண்ணாசாலையில் உள்ள “Spencers” கட்டடத்தில் இருந்த நிறுவனத்தில் கணக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது, அந்த உரிமையாளரிடம், ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார்.

பின், “சாது அச்சகம்” என்ற பெயரில் அச்சகம் ஒன்று தொடங்கி “நவசக்தி” நாளிதழை வெளியிட்டார். இன்றைய மியூசிக் அகாடமியின் பின்புறம் உள்ள கணபதித் தெருவில்தான் அந்த அச்சுக்கூடம் இருந்தது.

20-04-1918ல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே,”சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்” என்பதாகும்.

1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம்தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்கிறது. அதை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க.

தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு, அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது, அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாகராயர். பனகல் அரசர் ஆகியோர், “திரு.வி.கவை நாடு கடத்தினால், பதவியை ராஜினாமா செய்து விடுவோம்” என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடிவுற்றது.

“தேசபக்தன்”, “நவசக்தி” ஆகிய பத்திரிக்கைகளை நிறுவி, அதன் மூலம், தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார்.

நாயுடு, நாயக்கர், முதலியார் என்று, காங்கிரஸ் கட்சி – வரதராஜூலு, பெரியார், திரு.வி.க. ஆகியோரின் ஆளுமையில்தான் இருந்தது.

சமயங்களில் பொதுமை வேண்டி, அனைத்துச் சமயங்களையும் பெருமைப்படுத்தி பல புத்தகங்கள் எழுதினார் திரு.வி.க.

1919 ல் முதன் முதல் மேடையேறிப் பேசியது, “திராவிடரும் காங்கிரசும் ” என்ற தலைப்பில் என்பது ஒரு நகைமுரண்தான் என்றாலும், இறுதி வரை திராவிட இயக்கத்தோடு இணக்கமாகவே நடந்து கொண்டார்.

1925ல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண ஒரு வகையில் திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசிய போது,”சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர் பெரியார் என்றால், தாய் நான்தான்” என்றார்.

1948ல் ஈரோட்டில் நடைபெற்ற தி.க.மாநாட்டில் கலந்து கொண்டு ” திராவிட நாடு” படத்தினைத் திறந்து வைத்து ஓர் அரிய உரையினை நிகழ்த்தினார்.

சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் டிசம்பர் 9 வரை, திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங்கிரஸ் அரசு, அவரை வீட்டுக்காவலில் வைத்த கொடுமை நிகழ்ந்தது.

எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது.

“எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர்தான்” என்றார். அதன்படியே அவர் 17.9.1953ல் மறைந்த போது, வெளியூரில் இருந்த பெரியார், ஓடோடி வந்து இரங்கல் கூறி, அவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் முன்னின்று, தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் மூலம் செய்தார்.

“எனக்கு மீண்டும் பிறவி வேண்டும்! பிறந்து, தமிழ்ப் பணியும், சமூகப் பணியும் ஆற்றவேண்டும்” என்று கூறிய திரு.வி.க., வள்ளலாரின் கொள்கை வழிநின்றவர்.

திரு.வி.க.நடத்திய “நவசக்தி”யில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவர் மேல் கொண்ட பற்றால் “கல்கி” என்று அறியப்பட்டார்.

பல்வகையிலும் தமிழுக்கும், தமிழர்க்கும் தொண்டாற்றிய திரு.வி.க.வின் நூற்றாண்டை 1983ல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது.

திரு.வி.க.நூற்றாண்டு விழாவினை, திராவிடர் கழகம், சிறந்த முறையில் இரு நாட்களாக நடத்தியது.

கலைஞர் அவர்கள், சென்னை வானொலியில் “தமிழ்த்தென்றல் திரு.வி.க.” என்ற தலைப்பில் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அவரது ஆட்சிக் காலத்தில் திரு.வி.க.வின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.

செந்தமிழ்ப் பேச்சும், எழுத்தும் இன்பத் தேனருவி! பெண்ணின் பெருமையை, தொழிலாளி உரிமையை, கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையை, புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும் தேனருவித் திரு.வி.க.”- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

வாழ்க தமிழ்த்தென்றல் திரு.வி.க….!

– சு.குமாரதேவன்

நன்றி: விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!