“எது கவிதை?”
“எது கவிதை?”
ரத்தினச் சுருக்கக்
கருத்துக்கள் கவிதை,
மன ரணங்களை ஆற்றும்
தைலம் கவிதை,
மெல்லிய உணர்வை
எடுத்துரைப்பது கவிதை,
சொல்லாமல் சொல்லும்
சொற்சுவை கவிதை,
தத்துவ ஞானம்
தருவது கவிதை,
நற்பண்புகளை எல்லாம்
நானிலம் அறிய
நயமாய் எடுத்துச்
சொல்வதும் கவிதை.
இசையை ரசிக்கும்
மனிதனின் மனதில்,
தேனாய் சொற்கள்
விழுவதும் கவிதை.
வளவளவென்னும்
உரைநடை தன்னை,
சுவைபட சுருக்கும்
சொற்கள் கவிதை.
காதல் உணர்வை
கவிஞர்கள் பாடும்,
பாடல்களெல்லாம்
கவிதை கவிதை.
இயற்கை அன்னையின்
எழிலை இயம்பும்
இனிய வார்த்தைகள்
அனைத்தும் கவிதை,
குழந்தைகள் பேசும்
மழலைச் சொற்கள்,
பெற்றோர்களுக்கு
இன்னிசை கவிதை.
காதலர்கள் பேசும்
பேச்சுக்கள் எல்லாம்
திருமணம் வரையில்
அவர்களின் கவிதை !
கவிதைகளாய் வரும் வார்த்தைகளெல்லாம்
மனித வாழ்வை
மேலே உயர்த்தும்,
கவிதையற்ற கடுஞ்
சொற்கள் யாவும்,
பகையை வளர்த்து
நற்பண்பைக் குலைக்கும்.
காலத்தை
வென்று நிற்கும்,
கவிஞர்களைப்
போற்றுவோம்,
நம் உணர்வுகளை
மேம்படுத்தும்
கவிதைகளைப்
பாடுவோம்.
பி வி வைத்தியலிங்கம்