கண்டதும் காதலா? இதுவெல்லாம் காதலா
கண்டதும் காதலா? இதுவெல்லாம் காதலா என்கின்றார்கள்
. ஆம். சாதக பாதகங்களை ஆராயாமல் அந்த நிமிடத்தில் தழுவிக் கொள்ளும் அந்தக் காதல்தான் பிரபஞ்சத்திலேயே தூய்மையானது என்பேன்.
ஓரிரு நிமிடங்களிலேயே இனம் புரியாத ஒரு உணர்வைக் கொண்டு மொத்த உடலையும் ஆட்கொள்வது இந்தக் கண நேரத்துக் காதல்தான்.
நம் வாழ்க்கையே அறியாத ஒருவருக்காய் அடுத்த மணித்தியாலத்தில் மாறப்போகின்றது என்பதை யாருமே எதிர்பார்த்திருப்பதில்லை.
அந்த அதிசயங்களை எல்லாம் அத்தனை வேகமாய் பிரபஞ்சம் இந்தக் காதலின் பெயரால்தான் நிகழ்த்திச் செல்கின்றது.
தன் பாதை இதுதான் என்று தனித்து நின்றவள் காதலனிடம் நீதானடா என் உலகம் என சரணடைந்து விடுகின்றாள்.
சுதந்திரம் தேடி ஓடித்திரிந்தவள் நீ என்னைக் கண்டு கொள்வதில்லை” என்று போர் தொடுக்கின்றாள்.
அமேரிக்காவோ ஆஸ்திரேலியாவோதான் வாழ்க்கை என்றவன் அவள் மடிதான் மோட்சம் என்கின்றான்.
தன் வாழ்வினையே தன் துணைக்காக மீள் ஒழுங்குபடுத்தும் நிலைக்கு ஒரு மனிதனை மாற்றிவிடுகிறது இந்தக் காதல்.
இலாப நட்ட கணக்குகளைத் தாண்டிடும் எந்தக் காதலுக்கும்மில்லாத வலிமை இந்தக் காதலுக்குத்தான் இருக்கின்றது.
இது சரி வருமா வராதா என்ற வாதங்கள் எல்லாம் தாண்டி அந்தக் கணத்தில் தூய்மையாய் வாழ்ந்து விட்டுப் போவது இந்தக் காதல்தான்
. பயணத்திலோ, முகநூலிலோ சந்தித்த ஒருவரிடம் வாழ்வையை பகிர்ந்திடும் வலிமை இந்தக் காதலை தாண்டி எதற்கு இருக்கின்றது.
ஒரு தேநீரில் முடியும் சந்திப்போ, ஒரு நடனத்தில் நிகழ்ந்திடும் கூடலோ, கடலோரமாய் பார்வைகள் முட்டிக் கொள்ளும் தருணமோ
.. எதுவும் இக்காதலை பிரசவித்திடக்கூடும்.
இதுதான் காதல், இது மாத்திரம்தான் காதல், இப்படித்தான் காதல்
, புரிந்த பின்தான் காதல் என்று இங்கே காதலை வரையறை செய்ய யாருக்கு உரிமையுண்டு. காதல்களைக் கொண்டாடுவோம்
. காதல்களால்தான் அழகாகின்றது பிரபஞ்சம்
. காதல்களாலேயே நிறையட்டும் பிரபஞ்சம்.
மஞ்சுளா யுகேஷ்
1 Comment
அற்புதம் சகோதரியே பிப்ரவரி-14 வரவேண்டிய
கட்டுரை.
மிகச் சிறப்பு.