கலைவாணர் எனும் மா கலைஞன் – 2 – சோழ. நாகராஜன்
2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்…
தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை நாஞ்சில்நாடு என்று அழைப்பார்கள். ஒழுகினசேரியும் இந்த நாஞ்சில்நாட்டைச் சேர்ந்ததுதான். இந்தப் பகுதி முழுவதும் அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக, மலையாள தேசமாக இருந்தது. இங்கு தமிழும் மலையாளமும் பேசு மொழிகளாக இருந்தன. எல்லைப்புறத்துக்கேயுரிய சிறப்பியல்பாக இப்புறத்தில் தமிழ் மலையாள வாடையுடனும், அப்புறத்தில் மலையாளம் தமிழின் வாடையுடனும் பேசப்படுவதை இன்றளவும் காணலாம்.
கிழக்கிலும், தெற்கிலும் கடலும், மேற்கில் மலைப்பாங்கான பகுதியும், அதனையொட்டி கேரளத்தின் எல்கையும், வடக்கே நெல்லை மாவட்டமும் கொண்ட இயற்கையின் கொடைதான் இந்த நாஞ்சில்நாடு. கண்ணுக்கு எட்டிய தொலைவுவரையில் பசுமை போர்த்திய நிலம் நாஞ்சில்நாட்டிற்கு இயற்கையின் கொடை என்றே சொல்லவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐவகைத் தமிழ் நிலங்களின் அடையாளங்களையும் நாஞ்சில்நாட்டில் ஒருசேரக் காணலாம். ஆக, தமிழகத்தின் ஒரு சிறிய மாதிரி நிலமாகத் திகழ்வது இந்தத் தென்கோடிக் குமரி நிலம்.
இப்படியான சிறப்புகள் நிரம்பிய நாஞ்சில்நாடு நாடறிந்த அறிஞர் பெருமக்கள், புகழ் வாய்ந்த மாமனிதர்கள் பலர் பிறந்த பெருமையுடையதாக விளங்குகிறது. மனோன்மணீயம் சுந்தரனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பொதுவுடைமை இயக்கத்தின் தனிப்பெருந்தலைவராகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், நாடக மேதைகள் டி.கே.எஸ். சகோதரர்கள், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், சுசீந்திரம் ஆறுமுக நாவலர், வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை, சதாவதானம் செய்குத்தம்பி பாவலர் என நாஞ்சில்நாட்டில் தோன்றிய பெருமக்களின் பட்டியல் நீளும்.
இப்படியான அருமை பெருமைகள் வாய்ந்த குமரி மண்ணின் ஒழுகினசேரி கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள் சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியினர். தபால் வண்டி ஓட்டுபவராகப் பணியாற்றி வந்தார் சுடலைமுத்து. அந்நாளில் தபால்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாட்டுவண்டி துணைகொண்டே எடுத்துச் செல்வார்கள். அப்படியான வண்டி திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி, வழியெல்லாம் உள்ள ஊர்களில் தபால்களை எடுத்துக்கொண்டும், அந்தந்த ஊர்களுக்குச் சேரவேண்டிய தபால்களை விநியோகம் செய்துகெண்டும் நெல்லை வரையில் செல்லும். அந்த வண்டியை ஓட்டும் பணியைத்தான் சுடலைமுத்து கவனித்து வந்தார்.
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |