ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு போட்ட தடைகளை உடைத்த திமுக அரசு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு போட்ட தடைகளை உடைத்த திமுக அரசு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக ஆட்சி அடிபணிந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏறுதழுவுதல் அரங்கை திறந்துவைத்து வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்ட மக்களின் லேண்ட் மார்க் ஆக மாறி இருக்கிறது. தற்போது அதே மதுரை மாவட்டத்தில் கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிகளின் மீது கருணாநிதிக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்துவைத்தது எனக்கு கிடைத்த பெருமை. ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன். போட்டி என வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் மதுரை என்பதை வாடிவாசல் நிரூபித்துள்ளது.
தமிழர்களின் பண்பாட்டை சரியாக தெரிந்த ஆளுநர்கள் அந்தகாலத்தில் இருந்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்ததற்கான அடையாளம் உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3ஆண்டுகளில் மதுரையில் 3 பெருமைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசால் கொண்டுவரப்படாத ஒரு திட்டமும் உள்ளது; அது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக ஆட்சி அடிபணிந்தது. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு அப்போது கூறியது.

ஜல்லிக்கட்டு நமது வரலாறு, பண்பாட்டோடு தொடர்புடையது என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம். சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பல தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை உடைத்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...