கைதி பட விமர்சனம்
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படம் இது. கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.
ஒரு போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து பெருமளவிலான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒரு பழைய காவல் நிலையத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கிறார் காவல்துறை அதிகாரியான பிஜோய் (நரேன்). அதை மீட்க நினைக்கிறது போதைப் பொருள் கும்பல்.
அதே நேரம், தங்கள் கும்பலுக்குள் ஊடுருவிட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொல்லும் நினைக்கிறார்கள். மயக்க நிலையில் இருக்கும் அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நினைக்கிறார் பிஜோய். அன்றுதான் சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கும் ஆயுள் தண்டனைக் கதையான தில்லியைப் (கார்த்தி) பயன்படுத்துகிறான். வழியில் ஆபத்துகள் குறுக்கிடுகின்றன.போதைப் பொருள் கும்பலால் காவல் நிலையத்தைத் தகர்க்க முடிந்ததா, தில்லி காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றானா என்பது மீதிக் கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு படம். துவக்கத்திலிருந்தே சீரான நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது கதை. மயக்கத்திலிருக்கும் காவல்துறை அதிகாரிகளை லாரியில் ஏற்றிய பிறகு, ஒரே ரோலர் கோஸ்டர் ரைடுதான்.
அந்த லாரி கடக்கவிருக்கும் 80 கி.மீ. தூரத்திற்குள் வரும் சவால்களும் அதை முறியடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகின்றன.மற்றொரு பக்கம் காவல் நிலைய முற்றுகையை முறியடிக்க ஒற்றைக் காவலராக ஜார்ஜ் மரியான் எடுக்கும் நடவடிக்கைகள். இதில் அதிரடி ஏதும் இல்லையென்றாலும் பார்ப்பவர்களைத் தடதடக்கச் செய்கின்றன அந்தக் காட்சிகள்.
பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த ஜார்ஜ் மரியானுக்கு இந்தப் படம் தகுந்த கவனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மறுபடியும் தலைகாட்டியிருக்கிறார் நரேன். அவருக்கும் இது ஒரு நல்ல ரீ -என்ட்ரி
.ஆனால், எடுத்துக்கொண்ட கதைக்கு படத்தின் நீளம் சற்று அதிகம். தவிர, செல்லும்பாதையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, புத்திசாலித்தனமாகவோ சாதுர்யமாகவோ சமாளிக்காமல் அடித்து நொறுக்குவதன் மூலம் கடந்து செல்கிறார் கதாநாயகன்.
அது பல இடங்களில் நம்பகத் தன்மையைக் குலைக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸிற்கு சற்று முன்பாக, இரண்டு முறை கத்தியால் குத்திய பிறகும் 30 பேரை ஒற்றை ஆளாக அடித்துத் துவம்சம் செய்கிறார் கார்த்தி. கதாநாயகன் யாராலும் வெல்ல முடியாத சூப்பர் ஹீரோ என்று படைத்துவிட்டால், என்ன சுவாரஸ்யம் எஞ்சியிருக்கும்?
இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளை வெவ்வேறு விதமாக அமைத்திருப்பதன் மூலம் இந்த பலவீனத்தைச் சரிசெய்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் – பொழுதுபோக்குத் திரைப்படத்தை விரும்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள்.