‘ஆச்சி’மனோரமா

ஆச்சி’மனோரமா

2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது.

அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மிகவும் நெருங்கியவர்களின் திருமண மற்றும் துக்க நிகழ்வுகளில்கூட சில சமயங்களில் ஜெயலலிதா கலந்துகொள்வதில்லை என்ற நிலையில், உடல் நலம் குன்றியிருந்த சமயத்திலும் ஜெயலலிதா வந்தது மனோரமா ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.நம்மளை போலவே காலமெல்லாம் தன்னந்தனியா போராடுனவங்கனுதான் மனோரமாவை அம்மாவுக்குப் பிடிக்கும். அதனால்தான் அவங்களுக்கு அம்மா அஞ்சலி செலுத்த வந்திருக்காங்க” என்று ஜெயலலிதா குறித்து அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் ஒருவர் கூறியது திரண்டிருந்த கூட்டத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


உண்மைதான். பல மேடைகளில் ஜெயலலிதாவை ஆரத்தழுவி, முத்தமிடும் உரிமை மனோரமாவுக்குத்தான் இருந்தது. ஜெயலலிதா மட்டுமில்லை முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதிகா, சிவக்குமார் என பலரும் மனோரமாவின் அன்பு வளையத்திலிருந்தவர்கள்தான்.

ஒரு வருடம், இரண்டு வருடமா, 1958 முதல் அவர் இறக்கும்வரை மனோரமா நடித்து கொண்டுதான் இருந்தார்.

நாடகமோ, திரைப்படமோ, வானொலி அல்லது தொலைக்காட்சி தொடரோ. ஏதாவது ஒரு வடிவத்தில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தார். மனோரமா ஒரு ‘பெண் சிவாஜி’ என்று அவரின் நடிப்பை புகழ்ந்து ஒருமுறை நடிகரும், எழுத்தாளருமான சோ குறிப்பிட்டார்.

50க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடிப்பைச் சுவாசித்து வாழ்ந்த மனோரமா மறைந்த நாளில், அவர் சார்ந்த கலையுலகமும் துக்கத்தில் ஆழ்ந்தது.

குடும்ப பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியுமில்லை – ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே.

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் ‘ஆச்சி’ என அழைக்கப்பட்ட மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த நடிகை ஆவார்.மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. சிறுவயதில் அவரது குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது. குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் ஆண்டு வெளியான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் “கொஞ்சும் குமரி”. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம். 1960களாக இருந்தாலும், 2000த்துக்கு பிறகான காலம் ஆனாலும் மனோரமா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் கதாபாத்திரங்கள்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!