“பில்கிஸ் பானோ வழக்கு” – உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..! | சதீஸ்
பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மிக மோசமான கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் கட்டுக்குள் வரவே சில வாரங்கள் வரை ஆனது. அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடந்தது.
அப்போது பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் உலக நாடுகளைக் கூட அதிர வைத்தது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில், இந்த விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டை விதிக்கப்பட்டது. 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து குற்றவாளிகளையும் குஜராத் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மேலும், பலரும் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு தொடர்பான பதிவேடுகளைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கும் மற்றும் குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு கோருவதற்கு அடிப்படை உரிமை உள்ளதா என்று கேட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல காட்டமான கேள்விகளையும் எழுப்பி இருந்தது. இதற்கு முன்பு இந்த வழக்கில் நடந்த வாதங்களில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை வழங்குவதில் மாநில அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறியிருந்தது.
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பதில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. அந்த புதிய கொள்கைகளின்படி கூட்டுப் பலாத்கார குற்றவாளிகளை மாநில அரசுகளால் முன்கூட்டியே விடுவிக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு இருந்த 1992 கொள்கையின் கீழ் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்து இருந்தது. இதுவே விடுதலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களின் முக்கியமான வாதமாக இருந்தது.
புதிய கொள்கைகள் வகுக்கப்பட்ட பிறகு பழைய கொள்கைகள் அடிப்படையில் எப்படி குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்பது அவர்கள் தரப்பு கேள்வி.. அதேநேரம் இந்தச் சம்பவம் நடந்தது 2002 என்பதால் அப்போது இருந்த கொள்கைகள் அடிப்படையில் விடுவித்ததாகக் குஜராத் அரசு தெரிவித்து இருந்தது. இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பில்கிஸ் பானோ வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்று கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்கக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், அவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களின் மரியாதை முக்கியம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.