மநீம-வின் நிவாரண உதவிகள்: கமல்ஹாசன் பட்டியலிட்டார் | சதீஸ்
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் அரிசி, பால் பவுடர், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையில் மநீம தலைவர் கமல்ஹாசன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில், இது நற்பணி மையமாக இயங்கிக்கொண்டிருந்தது. தேடித் தீர்ப்போம் வா என்பதுதான் எங்களுடைய குரலாக இருந்தது. பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், மநீமவினர் இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதை தினமும் செய்வதையே வாழ் முறையாக கொண்டவர்கள். எனவே, அவர்கள் செய்துவரும் உதவிகளை தெரியப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை.
மநீம சார்பில் முதற்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மக்களுக்காக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதை திருநெல்வேலி மநீம மண்டல செயலாளர் ஒருங்கிணைத்தார். தற்போது லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324-எம் உடன் இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகள் இன்று 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை வெள்ள சேதத்தின்போது, மனிதநேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென் மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். மநீம சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று லாரிகள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்படும். உதவி தேவைப்படும்போது, இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்படும். மநீம நிர்வாகிகள் மற்றும் ஊடகவியாலாளர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
நிர்வாகிகளுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால், உதவி செய்யும்போது ஓடிபோய் தடுக்கிவிட்டு கீழே விழுந்துவிடாமல், நாம் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, உதவி செய்ய போகும்போது, உணர்ச்சிவசப்படுவதைவிட, திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டும். உதவி செய்ய போகும் இடத்தில் பொருட்களைத் தூக்கி எறிவதன் மூலம், ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, அதுபோன்ற தவறுகள் இல்லாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்பதால்தான் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.
இந்த உதவி கட்சி வரைகோடுகளுக்கு அப்பாற்பட்டது. மனிதநேயம் சார்ந்தது. எனவே, அதிகாரிகளுடன் கலந்துபேசி, எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்து அங்கு சென்று உதவ வேண்டும். தற்போது தூத்துக்குடியில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. எனவே, உதவி தேவைப்படுகிறவர்களுக்கு சரியாக உதவி சென்றுசேர வேண்டும். இதில் கிடைக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கி அதையும் விற்பனை செய்யும் ஆட்களும் இருக்கின்றனர். எனவே, நாம்தான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்கும் வகையில் முன்நின்று கொடுக்க வேண்டும். நல்லது செய்வதாக இருந்தாலும் அதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.