படப்பொட்டி – 2 வது ரீல் – பாலகணேஷ்
எஸ்.பாலசந்தர்! – இவர் இந்தியாவின் புகழ்மிக்க வீணை இசைக் கலைஞராகத் திகழ்ந்து வீணை பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டவர். இவ்விசைக் கலைஞர், தமிழில் ஹிட்ச்காக்குக்கு இணையான விறுவிறுப்பான த்ரில் திரைப்படங்களைத் தந்தவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரில் அனேகருக்குத் தெரியாத விஷயம்.
1948ல் ‘இது நிஜமா’, 1951ல் ‘கைதி’ ஆகிய படங்களை அவர் இயக்கியிருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் வெற்றியை எட்டியது 1954ல் இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம்தான். உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசேவாவின் ‘ரஷோமான்’ படத்தின் பாதிப்பில் அதே பாணியிலான திரைக்கதையமைப்பில் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியிருந்தார் எஸ்.பா. பாடல்களே இல்லாமல் வெளிவந்த ஏவிஎம்மின் இந்தப் படம் பெருவெற்றி பெற்றது.