மொபைல் போனோடுதான் உறவு
கடந்த வாரம் சென்னையில் ஒரு விழா
அவரவர் துறையில் ஜாம்பாவான்களாக இருந்தவர்கள், இருப்பவர்களை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பாராட்டு பெற்றவர்களில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவர்.
பரிசு கொடுக்க வந்தவர்கள், பெற வந்தவர்கள்,பார்வையாளர்கள் என பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதால் விழா குறுகிய நேரமே நடந்தது.
அந்த குறுகிய நேரம் கூட பொறுமை இல்லாமல் பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் நேரத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் எஸ்.பி.பி.,மைக் பிடிக்க வேண்டி நேர்ந்தது.
அதுவரை அமைதியாக இருந்தவர் மைக் கைக்கு வந்ததும் பொங்கி எழுந்துவிட்டார்.
எப்பவும் இந்த மொபைல் போனோடுதான் உங்கள் உறவு என்றால் எதற்காக விழாவிற்கு வந்தீர்கள் நீங்கள் போனில் உங்கள் இஷ்டத்திற்கு பேசுவதும் சிரிப்பதுமாக இருப்பதற்கு எதற்கு நாங்கள், விருந்தினர்களுக்கு இதைவிட மரியாதை குறைவு ஏற்படுத்திவிடவே முடியாது.
இந்த போன் வருவதற்கு முன்பும் நாம் வாழ்ந்தோம் இது இல்லாமலும் வாழ்வோம் ஆனால் சிலர் போன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லாமல் போய்விடுவது போல அதனுடனேயே வாழ்வது ஒரு வாழ்க்கையா?ரொம்ப வேதனையாக இருக்கிறது.
இதே போல குடிக்க தண்ணீர் கொடுத்தால் குடியுங்கள் இல்லை வேண்டாம் என்று சொல்லுங்கள் அதென்ன ஒரு மடக்கு குடித்துவிட்டு பாட்டில் தண்ணீரை குப்பையில் வீசுவது இனிமேல் அப்படியொரு தவறை தவறியும் செய்துவிடாதீர்கள்.
நான் ஒன்றும் சாஸ்திர ரீதியாக சங்கீதம் படித்து வந்தவனில்லை கேள்வி ஞானத்தால் பாடவந்தவன்தான் ஆனால் அந்த கேள்வி ஞானம் என்பது என் தந்தையிடம் இருந்து கூட வந்து இருக்கலாம் அவர் ஒரு ஹரிகதா காலாட்சேபம் செய்பவர் அவரைப் பக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து அவர் சொல்வதை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் என்பதால் கூட அந்த ஞானம் வந்திருக்கலாம்.
இப்படி பேசிக்கொண்டே போனவர் பின் மனம் சமாதானம் அடைந்தவராக அருமையான பக்தி பாடல் ஒன்றைப்பாடி அவையோரை மகிழ்வித்தார்