அயோத்தி விவகாரம்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி வாதப் பிரதிவாதங்கள் இன்றுடனை நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 1528-ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்றுள்ள நிகழ்வுகள் தேதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.
1528: முகலாய பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1885: மஹந்த் ரகுபீர் தாஸ், ராமஜென்மபூமி – பாபர் மசூதி இடத்தைச் சுற்றி சுவர் எழுப்ப ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
1949: சர்ச்சைகுரிய இடத்துக்கு வெளியே உள்ள மைய மண்டபத்தில் ராமர் சிலைகள் வைக்கப்பட்டது.
1950: கோபால் சிம்லா விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1950: பரமஹன்சா ராமச்சந்திர தாஸ் சிலைகளை வைத்து, தொடர்ந்து வழிபாட்டை மேற்கொள்ள வழக்கு தொடுத்தார்.
1959: நிர்மோஹி அக்ஹாரா அமைப்பு சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுத்தது.
1981: உத்தரப் பிரதேசத்தின் மத்திய சன்னி வக்பு வாரியம் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.
பிப்ரவரி 1, 1986: ஹிந்து மதத்தை வழிபடுபவர்களுக்கு சர்ச்சைக்குரிய இடத்தை திறக்க உள்ளூர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 14, 1989: சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது நிலவும் சூழலே தொடரலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 6, 1992: பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
ஏப்ரல் 3, 1993: சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசால் அயோத்தி சட்டம் கொண்டுவரப்பட்டது.
அக்டோபர் 24, 1994: இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில், ‘மசூதி, இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல’ என்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.
ஏப்ரல், 2002: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
மார்ச் 13, 2003: அஸ்லாம் என்கிற பூரே வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வித மதச் சடங்கு செயல்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மார்ச் 14: சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிப்பதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவுகள் அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்டம்பர் 30, 2010: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 9, 2011: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
பிப்ரவரி, 2016: சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட சுப்ரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தா
மார்ச் 21, 2017: அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர், இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண பரிந்துரைத்தார்.
ஆகஸ்ட் 7: அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஆகஸ்ட் 8: சர்ச்சைக்குரிய இடத்துக்கு சற்று தொலைவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி கட்ட முடியும் என உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
செப்டம்பர் 11: அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தை மேற்பார்வையிடுவதற்கு 10 நாட்களுக்குள் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் 2 பேரை கண்காணிப்பாளர்களாக நியமிக்க அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர் 20: அயோத்தியில் ராமர் கோயிலையும், லக்னௌவில் மசூதியையும் கட்டலாம் என உத்தரப் பிரதேச வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
டிசம்பர் 1: அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 32 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
பிப்ரவரி 8, 2018: அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.
மார்ச் 14: இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதில் சுப்பிரமணிய சுவாமியின் மனுவும் உள்ளடங்கும்.
ஏப்ரல் 6: அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஜூலை 6: வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அமைப்புகள் இதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்று உத்தரப் பிரதேசம் உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது.
ஜூலை 20: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
செப்டம்பர் 27: இந்த வழக்கில் ‘மசூதி இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல’ என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது
அக்டோபர் 29: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் உரிய அமர்வு முன்பு அயோத்தி வழக்கு விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. குறிப்பிட்ட அந்த அமர்வு வழக்கு விசாரணைகளை முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நவம்பர் 12: இந்த வழக்கின் மனுக்கள் மீதான விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற அகில் பாரத ஹிந்து மகாசபா விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
நவம்பர் 22: இந்த வழக்கில் தீர்வு காணும் வரை அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சமூகத்தில் இயல்பு நிலையை பாதிக்கும் வகையிலான தங்களது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற தொடரப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டிசம்பர் 24: இந்த வழக்கின் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 4-ஆம் தேதி எடுத்துக்கொள்ளவுள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 4, 2019: இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட புதிய நீதிபளைக் கொண்ட அமர்வு, விசாரணை நடத்தப்படும் தேதி தொடர்பாக ஜனவரி 10-ஆம் தேதி முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
ஜனவரி 8: வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, என்வி ரமணா, யுயு லலித் மற்றும் டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஜனவரி 10: இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி யுயு லலித் தன்னை விலக்கிக் கொண்டதையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 25: இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய புதிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த புதிய அமர்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, டிஒய் சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்ஏ நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜனவரி 27: நீதிபதி எஸ்ஏ பாப்தே இல்லாத காரணத்தினால் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜனவரி 29: சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே திருப்பி வழங்க அனுமதி கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
பிப்ரவரி 20: பிப்ரவரி 26-ஆம் தேதி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
பிப்ரவரி 26: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியாக மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து வரும் மார்ச் 5-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மார்ச் 6: அயோத்தி விவகாரத்தில் இருதரப்பு ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதுதொடர்பான தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மார்ச் 9: இந்த வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்எம் இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்
மே 10: சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 1: அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக மத்தியஸ்தர் குழுவால் எவ்வித இறுதி முடிவையும் ஏற்படுத்த முடியவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இவ்வழக்கில் தினமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 6: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தினசரி அடிப்படையிலான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
செப்டம்பர் 18: அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அக்டோபர் 4: இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் 17-ஆம் தேதியோடு நிறைவுபெறுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அக்டோபர் 15: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,”இன்று வழக்கு விசாரணையின் 39-வது நாள். நாளை 40-வது நாள், அதேசமயம் அதுதான் வழக்கு விசாரணையின் கடைசி நாள்” என்று தெரிவித்தார்.
அக்டோபர் 16 (இன்று): இந்த வழக்கில் இருதரப்பின் இறுதிக்கட்ட வாதங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், இந்த வழக்கின் தீர்ப்பு அதற்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.