விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள், ஒப்புக்கொண்டதில்லை.அதேபோல இந்திய அரசையோ, காங்கிரஸ் கட்சியையோ மாவீரர் நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை. ராஜீவ் காந்தி கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கெனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள். அந்தப்பழி, விடுதலைப்புலிகளின்மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதுதான், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களின் கருத்து. பிரபாகரனின் கருத்தும் இதுதான் இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கு, அரசியல் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்வது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது. இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ் மக்களின் விருப்பத்தின் பேரில், இலங்கைக்கு இந்திய அமைதிப்படையான ஐபிகேஎஃப் சென்றது.
அப்போது, அமைதிப்படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்குமே கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. முதன்முதலாக இந்திய அமைதிப்படையை எதிர்த்து உயிர்ப் பலியானவர், தோழர் மாலதி. இதனால் அமைதிப்படையின்மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது, தமிழர்களுக்கும் கோபம் இருந்தது.
அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக் கூடியதுதான். சரிதான் என்றாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். விடுதலைப்புலி பிரபாகரன்கூட, ஒரு நாளும் இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதில்லை. இந்திய அரசை பகைத்துக்கொள்ளாத ஒரு அணுகுமுறையைத்தான் அவர் கையாண்டார்.