‘நவயுக கண்ணகி’ இயக்கி தயாரித்த கிரண் துரை ராஜ் பேட்டி…! | தனுஜா ஜெயராமன்

 ‘நவயுக கண்ணகி’ இயக்கி தயாரித்த கிரண் துரை ராஜ் பேட்டி…! | தனுஜா ஜெயராமன்

இந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம்?

“நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அங்கே வெறும் கன்னட தமிழர் வித்தியாசம் மட்டும் தான். அங்கிருந்து இங்கே வந்து பார்க்கும்போது தான் என்னுடைய முந்தைய தலைமுறையில் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

எதிர் தரப்பில் இருந்து பிரச்சனைகள் பற்றி பேசும்போது ஜாதியை பற்றி பேசினால் மட்டும் பரவாயில்லை, கடவுள் இல்லை என்றெல்லாம் பேசுகிறார்கள்.. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக நான் என் கூட்டத்தை தேடுவதில்லை.. ஆனால் நீங்கள் என்னை அவ்வாறு சித்தரித்தால் நானே ஒரு படம் எடுத்து எங்கள் தரப்பை காட்டவேண்டும் என்பதற்காகத்தான்  இந்த படத்தை எடுத்தேன்.

ஜாதி இருக்கிறதா?

சினிமாவுக்காக சென்னை வந்தபோது, இங்கே.. சென்னையில் ஜாதி பார்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள். 5 நிமிடத்திலேயே நம் ஜாதி என்ன என்று நம்மிடமே போட்டு வாங்கும் விதமாக பேசுவார்கள். எனக்கு என் ஜாதியை சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று கூட தெரியாது. ஆனால் நான் பொதுவாக பேசுபவன். சினிமா ஆசையில் சென்னை வந்தவன். என் ஜாதியை கண்டுபிடித்தவர்கள் அந்த கோணத்திலேயே என்னை சித்தரிக்க துவங்கி விடுவார்கள். அதனால் தான் இந்த கதையை என்னுடைய முதல் படமாக்க நினைத்தேன். இனி அடுத்து நான் எடுக்கும் படங்களில் கூட என் வாழ்க்கையில் பாதித்த நிஜ விஷயங்களை தான் படமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்த படத்தில் மாப்பிள்ளை கதாபாத்திரம் ஒரு தப்பும் செய்யவில்லை என்றாலும் அவரை வைத்து ஒரு தவறான ‘கேம்’ ஆடப்படும். பெண் கதாபாத்திரத்தின் தந்தை கடைசிவரை தான் செய்தது சரிதான் என்று பெண்ணிடம் வாதாடுவாரே தவிர தான் செய்த தவறை ஒப்புக் கொள்வதில்லை. இந்த மாதிரி மனநிலையில் தான் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஜாதியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார் என்று சொல்கிறீர்கள்.. பொதுவாக திரைப்பட இயக்குனர்கள் ஜாதி பற்றி பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். சினிமாவை கலையாக தான் பார்க்கிறேன். பா.ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான படம். அவர் அந்த மாதிரி பார்க்கிறார் என்பதற்காக அவரை வெறுக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். படமாக அவரை பின்பற்றுவேன்.. வாழ்க்கையில் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.

இப்படத்தின் கதை குறித்து?

தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்ப்பதற்கு பதிலாக , இந்தப் படத்தின் மாப்பிள்ளை கதாபாத்திரத்தை மணப்பெண் பழி வாங்குவது போன்று காட்டுவது சரியா என்று கேட்டால் அந்த பெண்ணின் பார்வையில் அந்த மணமகன் தனது சமூகத்தை சேர்ந்தவன் என்கிற ஒரு வெறுப்பு இருக்கிறது. ஆனால் அந்த சமூகத்தில் பிறந்ததை தவிர அவன் மீது எந்த தவறுமே இல்லை. இப்போது வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் படத்தில் காட்டப்படும் போது ஒருவர் மீது ஒருவர் தவறு இருப்பது போன்று தான் காட்டுகிறார்கள். ஆனால் தங்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் இவ்வளவு பிரச்சனைகளே இல்லையே. இதைத்தான் நான் சொல்ல விரும்பினேன்.

பெரியார் சிந்தனையை வைத்திருக்கிறோம் என்றால்.. பெரியார் கண்ணகியை எப்போதும் முட்டாள் என்பார். காரணம் தனது மோசமான கணவனுக்காக பழிவாங்குகிறேன் என ஊரையே எரித்தவள் என்பதால். இந்த படத்தின் கதாநாயகியும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பாள். ஆனால் ஒரு கட்டத்தில் தான் பெரியாரை படிக்கத் துவங்குகிறாள்.

பெண்கள் சிகரெட் குடிக்கலாமா?

பெண் சிகரெட் குடிக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது அவர்கள் விருப்பம். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் படத்தில் இருக்கும் கதாபாத்திரத்திற்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. சில மூடநம்பிக்கைகள் இருக்கின்றது என்பது போன்று கதையில்  கூற வேண்டி இருந்தது. அதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். ஒரு தனி நபர் தவறு செய்வதை,  ஒட்டுமொத்தம் செய்த தவறாக சித்தரிக்கக் கூடாது என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்து.

தலையாட்டி பொம்மை குறியீடா?

படத்தில் தலையாட்டி பொம்மை அடிக்கடி ஏன் காட்டப்படுகிறது என்றால் நமது இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு தலையாட்டி பொம்மையாக தான் பெண்களை இருக்க செய்கிறார்கள் என சொல்வதற்காக தான் என்று கூறினார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...