கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா..! | சதீஸ்
ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பினரும் ஒரே மாதிரியான உடையை அணிய வேண்டும் என்று கடந்த பாஜக ஆட்சியில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து, தேசிய அளவில் கவனம் பெற்றன.
மேலும் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஆடை கட்டுப்பாடுகள் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புக்களை அளித்தனர். அதாவது, உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர்.
இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து, நிகழ்ச்சி ஒன்றில், சித்தராமையா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“பெண்கள் ஹிஜாப் அணிந்து இனி வெளியே செல்லலாம். முந்தைய உத்தரவை திரும்பப் பெறுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். உணவு உண்பது அவரவர் விருப்பம், நான் ஏன் ஆட்சேபனை செய்ய வேண்டும்? நீங்கள் விரும்பும் உடையை அணியுங்கள், நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள், நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் செய்யக்கூடாது. நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்.” என தெரிவித்தார்.
இந்த சூழலில், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறுவது ஏமாற்று வேலை. ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துகிறது.” என பதிவிட்டுள்ளார்.