ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு ஆதரவாகவும், எனது அரசிற்கு ஆதரவாகவும் ஒட்டு அளித்தது. 2019 தேர்தலில், மக்கள் மகத்தான தீர்ப்பு அளித்தனர்.. இங்கு பேசுவது பெருமை அளிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக பேசுகிறேன். மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் சரியாக பொருந்துகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டியுள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மூலம் அடையாளபடுத்தப்படும் திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்படுகின்றன.இந்தியாவின் நிதிசார்ந்த திட்டங்கள் உலகத்திற்கு உதாரணமாக உள்ளன. இங்கு வரும் போது, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஐ.நா., சபை சுவர்களில் பார்த்தேன். இந்தியாவிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் நீர் சேமிப்பில் கவனம் செலுத்த உள்ளோம்.2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படும். 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், 2025க்குள் காசநோய் ஒழிக்கப்படும். சர்வதேச சவால்களை இந்தியா சமாளித்து வருகிறது.சிறந்த திட்டங்களுக்காக கூட்டு நடவடிக்கையை நாங்கள் நம்புகிறோம். 37 கோடி மக்கள் வங்கி கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டம் உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசாரம் இந்திய கலாசாரம். இந்தியாவுக்கு என தனியான கலை, கலாசாரம் உள்ளது இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம. அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களது இலக்கு. புது இந்தியாவில் சர்வதேச நோக்கங்களை கொண்டதாக இருக்கும்.
எங்கள் நாட்டில் வாழ்ந்த கனியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் ‘ என 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளார். இதற்கு அர்த்தம், அனைத்தும் நமது ஊர், அனைவரும் நமது உறவினர்கள் என்பது தான். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கி இந்தியா பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் இந்தியாக முன்னிலையில் உள்ளது. பருவநிலை மாற்றத்தால், சர்வதேச அளவில் பேரிடர் ஏற்படுகிறது. ‘பருவநிலைீயை காப்போம் ‘ என்ற கூட்டணியில் அனைவரும் இணைய வேண்டும். சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் தீட்டி இருக்கிறோம். உலக வெப்பமயமாதலை தடுப்பதை நினைவில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.
உலகிற்கு இந்தியா அமைதிக்கான செய்தியை கொடுத்துள்ளது போரை வழங்கவில்லை. புத்தர் தான் வேண்டும் யுத்தம் வேண்டாம்.ஐ.நா., அமைதிப்படையில் இந்திய வீரர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். பயங்கரவாதம், குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு எதிரானது அல்ல. அனைத்து நாட்டிற்கும் எதிரானது என நாங்கள் நம்புகிறோம். மனித சமுதாயத்திற்கு பயங்கரவாதம் பெரிய சவாலாக உள்ளது. மனித நேயத்திற்காக அதனை எதிர்க்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் இணைய வேண்டும். பயங்கரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம். ஐ.நா.,வின் அடிப்படை கொள்கைகளை பயங்கரவாதம் பாதிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்து எங்களை காயப்படுத்தி வருகின்றன. அதே நேரம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை ஆகும். தற்போதை பேச்சில், மோடி, பாகிஸ்தான் குறித்தோ, காஷ்மீர் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் குறித்தும், பருவநிலை மாற்றம் குறித்தும் பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாக பேசினார்.