நாட்டிய_பேரொளி_பத்மினி
#நாட்டிய_பேரொளி_பத்மினி நினைவு தினம் இன்று -செப்டம்பர் 24
பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.
1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா…
2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி…
3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி…
4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி…
5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி
ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.
அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.
திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.
பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.
தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி – பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.
தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி – பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.
தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் ‘உங்கள் கண்கள் எங்கே அத்தான்…’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி – பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.
கலைஞர் வசனத்தில் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் மீண்டும் கண்ணகியை திரையில் காட்ட முயற்சி நடந்தது. கோவலனாக கணேசன், கண்ணகியாக பத்மினியை நடிக்க வைக்கத் திட்டம் உருவானது. தங்கப்பதுமையும் ஏறக்குறைய பத்தினிப் பெண் ஒருவரின் பரிதவிப்பு. அதை பத்மினி பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவே போதும் என செட்டியார் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்.
தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.
உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.
திருமணத்துக்குப் பிறகு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த வேளையில், தமிழ் சினிமா தேவிகாவுக்கு மாறி இருந்தது. பத்மினியின் இடத்தில் சிவாஜிக்குப் பக்கத்தில் தேவிகாவின் அன்புக்கரங்கள். தமிழில் தலை தூக்க பத்மினி ரொம்பவே சிரமப்பட்டார். 1966 பொங்கலுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்தி வரும் வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜாவாக தனித்து வாடினார்.
சித்தியில் எம்.ஆர்.ராதாவின் கெடுபிடிக்கு ஆளாகும் மனைவி மீனாட்சியாக ஜொலி ஜொலிப்பான நடிப்பு. பி.சுசிலாவின் தாய்மை சிந்தும் குரலில் ‘பெண்ணாகப் பிறந்தவருக்கு கண் உறக்கம் இரண்டு முறை’ என்கிற கண்ணதாசனின் ஆறு நிமிடத் தாலாட்டுப் பாடல், பத்மினிக்குப் புது வாழ்வை உறுதிப்படுத்தியது. அட்டகாசமாக 100 நாள்கள் ஓடி, பெண்களிடையே பத்மினியின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது. சித்தியில் பத்மினியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகள் கிடையாது.
சித்தியின் உச்சகட்டப் பெருமிதம், ஜெமினி ஸ்டூடியோ அதை ஹிந்தியில் தயாரித்தது. அவ்ரத் என்ற அந்தப் படத்தில், நாயகி பத்மினிக்குத் தம்பியாக, முத்துராமன் வேடத்தில் வந்தவர் புதுமுகம் ராஜேஷ் கன்னா.
ஏ.பி.நாகராஜனின் சரஸ்வதி சபதத்தில் பார்வதியாக பத்மினி தோன்றினார். 1967-ல், சிவாஜி கணேசனோடு மறுபடியும் ஜோடி சேரும் வாய்ப்பை, பேசும் தெய்வத்தில் கே.எஸ்.ஜி. அளித்தார். மீண்டும் வசந்தம்!
மார்க்கெட் போனால் அம்மா, அக்கா வேஷம்தான் என்பதை, முதன் முதலில் முறியடித்தவர் பத்மினி! நாற்பதை நெருங்கியும், கனவுக்காட்சிகளில் ‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ’ என்று சிவாஜியை பத்மினியுடன் டூயட் பாடவைத்தார் கே.எஸ்.ஜி.
கோபாலகிருஷ்ணனின் இன்னொரு மறக்கமுடியாத படைப்பு, கண் கண்ட தெய்வம். அதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் பத்மினிக்கும் பலத்த நடிப்புப் போட்டி. தமிழகத்தின் மண்வாசனை வீசும் பண்பாட்டுக் காட்சிகளில், பத்மினியின் புகழ் கூடுதலாயிற்று. அதைத் தொடர்ந்து, 1967 தீபாவளிக்கு வெளியான இருமலர்களில் ஒரு மலர் பத்மினி. 100 நாள்கள் ஓடியது. விடா முயற்சியோடு போராடி வெற்றிக்கோட்டைச் சீக்கிரத்தில் தொட்டு விட்டார் பத்மினி.
எந்த ஹீரோவும் இல்லாமல், 1968 இறுதியில் பத்மினி நடித்த படம் குழந்தைக்காக. கொலைக்கார வில்லன்களுடன் போராடி, பேபி ராணியைக் காப்பற்ற வேண்டி, இரும்புப் பெண்மணியாக, காட்சிக்கு காட்சி பதற்றம் காட்டி பப்பி தனி ஆவர்த்தனம் புரிந்தார். 100 நாள்கள் ஓடியது. அதே படம் ஹிந்தியில் உருவானபோதும் பத்மினியே நாயகி.
1969-ல் பத்மினி நடித்து வெளியான ஒரே படம் குருதட்சணை. புராணப் படங்கள் தயாரித்து வந்த ஏ.பி.நாகராஜனின் சமூகச் சித்திரம். சிவாஜி, கல்வி கற்க விரும்பும் கிராமத்தானாகவும், பள்ளி ஆசிரியையாக பத்மினியும் நடித்தனர். தன் படிக்கும் ஆசையை சொல்லி பத்மினியின் கால்களில் விழுவார் சிவாஜி. அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. நிஜத்தில் மாறுபட்ட கதையாக இருந்தாலும், படம் படுதோல்வி.
1970-ல் கணேசனோடு இரண்டு வெற்றிப்படங்கள். 1. ஜெமினியின் விளையாட்டுப்பிள்ளை, 2. சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு வியட்நாம் வீடு. விளையாட்டுப்பிள்ளையில் நடிக்கும்போது ஒரு விபரீதம் எதிர்பாராமல் நடந்தது. எமோஷனல் சீனில் தன்னை மறந்து, பாசாங்கு இன்றி பத்மினியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் சிவாஜி. அதன் விளைவு, பத்மினியின் கம்மல் கழன்று அடுத்த ஃப்ளோரில் போய் விழுந்தது. காட்சி ஓகே.
ஷாட் முடிந்ததும் பத்மினியைக் காணோம். அடுத்த சீனுக்காக தேடிப் போய்ப் பார்த்தால், ஓர் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பத்மினி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கி, அழுது அழுது கண்களும் முகமும் சிவந்து, ‘ஸாரி ஒண்ணுமில்ல. வலி தாங்கல. அஞ்சு நிமிஷம் கழிச்சி முழுசா அழுதுட்டு வரேன். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’ என்றார்.
வியட்நாம் வீடு நாடகத்தில், கணேசனின் ஜோடியாக சாவித்ரி மாமியாக பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா. டிராமா சினிமா ஆகிறது என்றதும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால், சிவாஜியின் சாய்ஸ் பத்மினி. ‘அவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சினிமா வெற்றி பெற மார்க்கெட் உள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று சகுந்தலாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை. வேதனையோடு வீடு திரும்பினார் சகுந்தலா. பத்மினி அவருக்குப் பிராண சிநேகிதி. அவர் தனக்காக சிவாஜியிடம் சிபாரிசு செய்யாமல் போய்விட்டாரே என்கிற தீராத காயம், சகுந்தலாவுக்கு அவர் மறையும் வரையில் நீடித்தது.
சாவித்ரி மாமியாக பத்மினி, மடிசார் புடவை கட்டிக்கொண்டு ‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வுக்காகப் பாடி ஆடினார். வித்தியாசமாக, பிராமண பாஷை பேசி வியட்நாம் வீடு படத்தில் வலம் வந்தார். ஆனால், ஜி.சகுந்தலா அவரை விடச் சிறப்பாக நடித்ததாக, ரசிகர்கள் சிலர் பத்திரிகைகளில் எழுதினர்.
கணவர் ராமச்சந்திரனின் மருத்துவப் படிப்பு லண்டனில் முடிந்தது. அடுத்து அவரோடு பத்மினி அமெரிக்காவுக்குக் குடி போக வேண்டிய நிர்ப்பந்தம். கே.பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகனிலும் தொடர்ந்து நடிக்க இயலாமல் போனது.
1971-ல் சிவாஜி – பத்மினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பி.எஸ்.வீரப்பாவின் இருதுருவம். திலீப்குமார் – வைஜெயந்தி மாலா நடித்த ஹிந்தி சூப்பர் டூப்பர் கங்கா ஜமுனாவின் தமிழ் வடிவம். பொங்கலுக்கு வெளியாகி ஏனோ வெற்றிபெறாமல் போனது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குலமா குணமா, சிவாஜி – பத்மினி ஜோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அவர்களின் கடைசி 100 நாள் படம் அது. அதற்குப் பிறகு வெளியான தேனும் பாலும் படமும் வசூலாகியது. பத்மினியும் சரோஜா தேவியும் சிவாஜியோடு முதலும் கடைசியுமாக தேனும் பாலுமாகத் தோன்றினார்கள்.
1986-ல், சிவாஜியுடன் நிறைவாக தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு என கை கோர்த்தார். புதிய பறவையில் ஒலித்தது விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடல். அதே மெட்டில், இசைஞானியின் கைவண்ணத்தில் ‘பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என டிஎம்எஸ் – பி.சுசிலா குரல்களில், தாய்க்கு ஒரு தாலாட்டில் சிவாஜி – பத்மினி ஜோடி வாயசைத்துப் பாடியது. அதுவே அவர்களின் கடைசி டூயட்!
ஏறக்குறைய 40 சினிமாக்களில் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்ட, சிவாஜி – பத்மினி ஜோடியின் ஒப்பற்ற ஆற்றலை, தினந்தோறும் சின்னத்திரைகளில் பார்க்கலாம்.
தில்லானாமோகனாம்பாள், வஞ்சிக்கோட்டைவாலிபன், திருவருட்செல்வர் திரைப்படங்களில் இவரின்
நடிப்பை மறக்க முடியுமா