ஒருநாள் ஸ்டிரைக்; உற்பத்தி முடங்கியது
ஒருநாள் ஸ்டிரைக்; உற்பத்தி முடங்கியது
நிலக்கரிச்சுரங்கங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா மற்றும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனங்களில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நிலக்கரி தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு நிறுவனங்களிலும் நிலக்கரி உற்பத்தி, போக்குவரத்து, விநியோகம் என அனைத்து பணிகளும் முடங்கின.
மத்திய அரசின் கோல் இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் 5 தொழிலாளர் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 5ம் தேதி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிற்சங்கமான தெலுங்கானா போக்கு கானி கர்மிகா சங்கமும் ஆதரவு தெரிவித்தது.
தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அழைப்பு விடுத்தார்.ஆனால் அவரது அழைப்பை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
இந்நிலையில் இன்று புதுடில்லியில் நடந்த இந்திய எரிசக்தி சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அரங்குக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசுகையில் :
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலக்கரி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் திறந்தே உள்ளன. நாளைக்குள் கோல் இந்தியா நிலக்கரி சுரங்கங்களில் மீண்டும் பணிகள் துவங்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்தார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் நாட்டின் 80 சதவீத நிலக்கரி தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் இன்றைய போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் இதே கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்